Loading

Wednesday, December 28, 2011

முற்றுப் பெறாத முல்லைபெரியாறு பிரச்சினை !


பொதுவாக ,தமிழனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் ,அதன் தீர்வுக்கு உடனடியாக எதையும் யோசிக்காமல் தீக்குளிப்பு என்ற கூர்மையில்லாத ஆயுதத்தை பயன்படுத்துவார்கள் .இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் ஓரிருவர் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வந்தது .

அதையும் தாண்டி ,.தமிழக மக்கள் அனைவருக்கும் ,இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ,கேரள அரசின் பிடிவாதத்தை வெறுக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடிந்தது .தினமும் ,சில ,பல போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கிறது .

அணையின் நீர்மட்டத்தை முன்னமே உயர்த்த சொல்லி ,நீதிமன்றம் உத்தரவிட்டும் ,சற்றும் செவி சாய்க்காமல் கேரள அரசு இருந்தபோதே ,நாம் உயிர்ப்புடன் போராடியிருக்க வேண்டும் .அந்த நேரத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை . எந்த ஒரு பிரச்சினையையும் ஆரப் போட்டு செய்வது ,தமிழக அரசின் கொள்கையாகி விட்டது.

முன்பெல்லாம் ,சிவகங்கை ,ராமநாதபுரத்தில் ,முப்போகம் விளைந்தது... அதற்கு மிக முக்கியமான காரணமாய் ,சதுரகிரிமலை தண்ணீரும் ,முல்லைபெரியாறு தண்ணீரும் அதிக பங்களித்து ..கடந்த பத்து ஆண்டுகளாக ,மழையை மட்டுமே நம்பி  ,இந்த மாவட்டங்கள் விவசாயம் செய்கிறார்கள் .இதை கேட்க ஒரு நாதியும் இல்லை .
அரசியல் தலைவர்களும் ,கடமைக்கு மத்திய அரசை கண்டித்து கடமையை முடித்துக் கொள்கிறது

 நம் பங்குக்கு நாமும் ...எங்கோ ஒரு கடற்கரையில் ,கூட்டத்தை நடத்திவிட்டு ,பிரச்சினையை ஆரப்போடுவதுதான் ..கண்ணுக்கெட்டிய தூரம்வரை சிறந்த ? வழியாக தெரிகிறது!

Saturday, December 10, 2011

என்ன செய்யலாம் உன்னை ?


நீ செய்த காரியத்திற்கு
உன்னை என்ன செய்யலாம் ?

குளியலறையில்
ஈரம்சொட்ட இருமணிநேரம்,
நிற்கவைக்கலாமா ?

தூக்கநேரத்தில்
துரியோதனின் துஷ்ப்ரயோகத்தை
அரங்கேற்றி விடலாமா ?

இல்லை ,28ம் தேதி வேளையில்,
உன்னை அந்தப்புரத்திற்கு,
அவசரமாக அழைக்கலாமா ?

சில முக்கிய இடங்களில்
காயத்தை ஏற்ப்படுத்தி
ஆச்சர்யப்படுத்தலாமா ?

இந்த நான்கில்
என்ன தண்டனை கொடுக்கலாம் ?

நீ செய்த சக்கரை இல்லாத கேசரிக்காக .

எங்கே போனது ?


எங்கே போனது
உன் பொழிவான முகம் ?

உன் துறுதுறு
கேலிப்பேச்ச்சும் ,
கிண்டலுடன் வரும்
வசிய வார்த்தைகளும்
எங்கே போனது ?

அனைவரையும் கவர
உபயோகப்படுத்தும் ஸ்டைல்களும்,
நல்ல விசயங்களை
தேடுகின்ற அக்கறையும்
எங்கே போனது ?

இவையனைத்தையும் விட ,
உன் வெள்ளைமனது
இன்று சிதிலமடைந்திருப்பதற்கு
காரணமென்ன ...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அட செல்ல மகளே .
டீச்சர் திட்டியதற்காகவா இத்தனை அலங்கோலம் ?


Sunday, December 4, 2011

அப்பாவுக்கு பிடித்த தேவ் ஆனந்த்!

நேற்று காலை ,பழம்பெரும் நடிகரும் ,ஹிந்தி திரைப்பட உலகில் ,சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் , தேவ் ஆனந்த் ( 26 September 1923 – 3 December 2011)   லண்டனில்
 காலமானார் !:-( . இருபது வருடங்களுக்கு முன்பு ,என் வீட்டில் ,தேவ்ஆனந்த் படங்களின் ஆடியோ கேசட்டுக்கள் ,மலை மலையாக குவிந்திருக்கும் . அப்பாவுக்கு தேவ் ஆனந்தின் படங்கள் என்றாலே கொள்ளை இஷ்டம் ! நேற்று அவர் இறந்த செய்தியை கேட்டு  
வருத்தமடைந்த
அப்பா ,பழைய நினைவுகளையும் ,அவருடைய படங்களை பற்றியும்  என்னுடன் பகிர்ந்து கொண்டார் !

தேவ்ஆனந்த் ,இந்திய அப்பாக்கள் ,தாத்தாக்கள் நெஞ்சில் இன்றும் வாழ்கிறார் ..என்னுடைய நெஞ்சிலும் !




பரிணாம காதல் கவிதைகள் !



நீ துப்பிய எச்சிலை,
 எடுத்து பார்த்தேன் ,
கவிதையாக தோன்றியது .retweet.

என் மனதை திருடியது நீதானென ,
நேற்று உன் அம்மா 
ஜவுளிக்கடையில் 
சேலை திருடியதை வைத்து புரிந்துகொண்டேன் !retweet

ஆண் கழிப்பறை முகப்பில் என் படமும் ,
பெண் கழிப்பறை முகப்பில் உன் படமும்
 பொருத்தி பார்த்தேன் ! 
சூப்பர் ஜோடியென பட்சி சொல்லியது !retweet

நீ வாய் கொப்பளித்த நீரை ,
துப்பிவிடாதே ,முழுங்கிவிடு ,
சிறு ஜீவன்கள் பிழைத்து போகட்டும் !retweet

உனக்கும் எனக்கும் 
பொருத்தம் ஓகே தான் ,
உன் அப்பன் டோங்லீ வாயனுக்கும்
 எனக்கும்தான் ஒத்துப்போகவே மாட்டேங்குது!retweet


Saturday, December 3, 2011

அபோகலிப்டோ (சினிமா 2006)

நான் பார்த்த திரைப்படங்களில் , என் மனதை கொள்ளைகொண்ட படங்களின் வரிசையில் அபோகலிப்டோ திரைப்படம் முக்கிய அங்கம் வகிக்கிறது ..மெல்கிப்சன் இயக்கிய இந்த ஆக்சன் கலந்த வரலாற்றுப் படம் ,பார்த்த அனைவரையும் வியக்கவைக்குமென்றால் அது மிகையல்ல !

அபோகலிப்டோ !பதினாறாம் நூற்றாண்டில் கதை ஆரம்பிக்கிறது .

பழங்குடி மக்களில் ,ஒரு குழுவினர் ,மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் ..உணவை வேட்டையாடி ,தன் குடும்பத்திற்கு கொடுப்பது என்று வளமையாக சென்றுகொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ,மற்றொரு அரக்க குணம் படைத்த பழங்குடி இனம் இந்த மக்களை வேட்டையாடுகிறது !அவர்களின் வாழ்விடங்களை தீ வைத்து , பெண்களை சூறையாடி ,ஆண்களை அடிமைப்படுதுகிறார்கள் .இந்த நேரத்தில்,
கதையின் நாயகன் ,தன் கர்ப்பிணி மனைவியையும் ,பையனையும் காப்பாற்ற எண்ணி ,அவர்களை பெரிய பள்ளத்தில் இறக்கிவிடுகிறார் .எல்லாரையும் அடிமைப்படுத்திய எதிரி கும்பல் ,நாயகனின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார்கள் ..பிடிபட்ட மக்களை கயிற்றால் கட்டி இழுத்துச்செல்கிறார்கள். .கைகள் கட்டப்பட்ட நாயகன் தன் மனைவி இருக்கும் இடத்தை பார்க்க ,சந்தேகப்பட்ட எதிரிப்படைவீரன் ஒருவன் , மரத்தில் கட்டப்பட்ட கயிறை வெட்டிவிடுகிறான்.
 
அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ,எதிரிப்படையின் முகாமுக்கு இழுத்துச் செல்கிறார்கள் ,பெண்களை ஏலத்தில் விட்டுவிட்டு ஆண்மக்களை ,கடவுள் பெயரில் பலியிடுகிறார்கள் .நாயகனை பலி கொடுக்குப்போகும்  நேரத்தில் .சூரியன் மறைய ,கடவுள் திருப்தியடைந்தாரென எண்ணி  ,நாயகனுடன் iசேர்த்து மற்ற அடிமைகளையும் அப்புறப்படுத்துகிறார்கள். அங்கிருந்து ஒரு மைதானத்தில் ,அடிமைகளை ஓடவிட்டு வேட்டையாடுகிறார்கள் .அதிலிருந்து தப்பிக்கும் நாயகன் ,தான் வாழ்ந்த காட்டுப்பகுதிக்கு ,தன் உயிரைக்காப்பாற்றிகொள்ள   ஓடுகிறார் .
ஆத்திரமடைந்த எதிரிப்படை ,நாயகனை வெறிகொண்டு துரத்துகிறார்கள் ..நாயகன் தப்பித்தானா ? பள்ளத்தில் இறக்கிவிட்ட மனைவி ,மக்களை காப்பாற்றினானா ? எதிரிப்படை என்ன ஆனது ? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் ...



இந்த படத்தின் விசேஷம் என்னவென்றால் ,இன்றைய வாழ்வில் ,சிறு சிறு விசயங்களுக்கு கூட அலுத்துக்கொள்ளும் நாம் ,தன் உயிரை காப்பாற்ற ,பலவித துன்பங்களை சகித்துக்கொள்ளும் நாயகன் ,நாயகனின் மனைவிக்கு முன்னால்,நம்முடைய  பிரச்சினையெல்லாம் சாதாரனமென எண்ணத்தோன்றுகிறது.  !

தனி மனித வாழ்க்கை போராட்டத்தை ,இத்தனை சுவாரசயத்துடன் எடுத்த மெல்கிப்சனுக்கு ஒரு சல்யூட் !

Monday, November 28, 2011

மாறுபடாத காதல் கதை !


ல்பனாவை இன்றுதான் பார்த்தேன் .திருநெல்வேலியில் சுலபமாக, அறியப்படாத தெருவில் தற்செயலாக,அவளை பார்க்க
நேர்ந்தது !

,ஆமாம் ,அதே கல்பனாதான் .முன்பொரு நேரத்தில் என் உயிராய் இருந்த அதே கல்பனாதான்.
கல்லூரியில்தான் முதன்முதலில் அவளைப் பார்த்தேன் .ஒடிசலான தேகம் சராசரி தமிழ் அழகு அவளிடம் தங்கியிருந்தது.  மௌன அவதாரத்தில் மட்டுமே அடிக்கடி காட்சி தருவாள் !அதிர்ந்து பேசாத பெண்களை எல்லாருக்கும் பிடித்துப்போவதுபோல், எனக்கும் கல்பனாவை சுலபமாக பிடித்துப்போனது.ஒரு சுப வேளையில் ,என் பிரியத்தை
அவளிடம் வெளிப்படுத்தினேன்..சில நாட்கள் மவுனத்திற்கு பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
சகஜமாக பேசினாளே தவிர எனக்கு சாதகமாக பேசவில்லை ..ஒரு செமஸ்டர் விடுமுறையின் முதல் நாளில் ..

உன்னை எனக்கு பிடிக்குது ரவி என்ற உரைநடையை
புதுக்கவிதை வடிவில் சொன்னாள்.

அப்படிப்பட்ட கல்பனாவைத்தான் இன்று தெருமுனையில்,ஒரு குடம் தண்ணிக்காக அவள் அல்லல்பட்டுக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது .என் அலுவலக வேலை விசயமாக ஒருவரை பார்க்க வந்த தருணத்தில் ,இந்த கசப்பான உண்மையை காண முடிந்தது !

காதலின் எல்லை எதுவோ ,அதற்கு மிக அருகில் சென்றது போல், கல்பனாவை அன்று காதலித்தேன் .ஒரு மழை காலத்தில் அவள் நனைந்துகொண்டே கல்லூரிக்கு வந்த
நாளிலிருந்து  ,ஒரு வார காலமாய் காய்ச்சலில் அவதிப்பட்டு கிடந்ததாள்..எந்தக் காதலனும், காதலிக்கு காய்ச்சல் என்றால் ,கொஞ்சமேனும் துடிக்காமலா இருப்பான்?

..நானும் துடித்தேன் ..துடித்ததோடு இல்லாமல் ,அவளுக்கு பிடித்த ஊதா நிறத்தில் ,ஒரு அழகிய குடையை பரிசளித்தேன் ..பிறிதொரு நாளில் கல்பனாவின் அப்பாவுக்கு காதல் விஷயம் தெரிந்து ,கல்பனாவை விஷ வார்த்தைகளால் வாட்டி எடுத்தார்கள் ..

இந்த நேரத்தில் ,இந்திய காதலன்கள் என்ன சொல்வார்களோ ,அதைத்தான் நானும் சொன்னேன் .வீட்டை விட்டு என்னுடன் வா ? என அழைத்தேன் ..கல்பனாவின் நேர்மை புத்தி அதற்க்கு தடை போட்டது ..கண்டிப்பாக காதல் ஜெயிக்குமென நம்பினாள்..

நம்பிக்கைதான் வாழ்க்கை என நம்பியவள் ,அவள் அப்பாவின் மாஸ்டர் பிளான் தெரியாமல் வெகுளியாக இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .ஒரு கொடும்வேளையில்
சத்தமில்லாமல் ஒரு மாப்பிள்ளையை ,கல்பனாவுக்கு பார்த்து கல்யாணத்தையும் முடித்துவிட்டார்கள் ..எதிர்க்க எனக்கு திராணி இருந்தும் எதிர்க்காமல் போனதின் காரணம்
"கல்பனாவின் மவுனத்தை தவிர வேறொன்றுமில்லை "!

அப்படிப்பட்ட கல்பனாவின் வாழ்க்கை,இன்று  எப்படி போகிறதென்ற கேள்வியாவது? கேட்டுவிடலாமே என கல்பனாவின் திசை நோக்கி நடந்தேன்.

 .என்னை பார்த்த கணத்தில் ,கல்பனாவின் முகம் ,ஆச்சர்யம் கலந்த குழப்பமானது .என்னை வரவேற்று வீட்டுக்கு வரச்சொன்னாள்.
எப்படி இருக்கிறாய்? என்ற சம்பிரதாய கேள்வியை கேட்டேன்
,நல்லா இருக்கேன் ரவி

,நீ எப்படியிருக்க ?

 கல்யாணம் ஆகிடுச்சா ?

 எத்தனை குழந்தையென கேள்வியை அடுக்கினாள்

 .. இன்னும் கல்யாணம் ஆகலை கல்பனா என்றேன்.

அவளின் கணவர் பற்றி கேட்டேன் .
.நல்லா இருக்கார்,எல்ஐசி ஏஜென்ட்ட்டாக இருக்கிறார் என்றாள்

 ..தொட்டிலில்  குழந்தை ஒன்று தெரிந்தது , ஆணா ? பெண்ணா ? என கேட்டேன் ,

 பெண் குழந்தையென சொல்லிவிட்டு குழந்தையை என்னிடம் கொடுத்தாள்..கல்பனாவின் முகச்சாயலை ஓரளவு என்னால் கணிக்க முடிந்தது ! சந்தோசமாகத்தான் இருக்கிறாள் என கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தது ..இதற்கு மேலும்,அவள் வீட்டில் இருந்து சங்கடம் கொடுக்கவேண்டாமென எண்ணி ,

சரி கல்பனா நான் இன்னொரு நாள் வர்றேன் என்றேன்.

கண்டிப்பா வரணும் ரவி, என சொன்னாள் .

சரியென சொல்லிவிட்டு கனத்த மனதுடன் திரும்பினேன் ..கல்பனா இன்னும் என்னை மறக்கவில்லை என்பதை அவள் வீட்டுச் சுவற்றில் ,நான் பரிசளித்த ஊதா நிற குடை, சொல்லாமல் சொல்லியது !

Friday, November 25, 2011

சிநேகிதி !


என்ன ஒரு ஆச்சர்யம் ,
உன் குரல் ஒலி
என் அழைபேசியில்
நெடு நாட்களுக்குப் பிறகு ,

எப்படி இருக்கிராயென்ற
உன் கேள்விக்கான
பதிலைச் சொல்லவே
பல வார்த்தை தடுமாறுகிறது ,

உன் சிரிப்பலையை
தொலைத்துவிட்டு
எங்கே அந்த பழைய ரவியையென
என்னை மட்டும் கேட்கிறாய் ,

மழுப்பல் பதிலை
கண்டுபிடிக்கும் முன்பே ,
நீயே இடையில் பேசி
என்னை காப்பற்றுகிறாய்,

சொந்தங்களின் கட்டாயத்தால் ,
முடிந்துபோன சடங்கிலிருந்து,
இப்பொழுதான் மீண்டேனென
விரக்தியை உதிர்க்கிறாய் ,

மீண்டும்
நட்பு மலர்வதற்கான
வார்த்தையை கூறுகிறாய்,
நானும் வரவேற்கிறேன் !

Friday, November 11, 2011

அன்புள்ள தோழிக்கு ..



என் மதத்தில் பிறந்திருந்தால்,
என்னை மணம் முடித்துவிட்டுத்தான்
மறுவேளை பார்ப்பேன் என
அழுத்த வார்த்தை கூறிச்சென்றாய்..

ஒவ்வொரு முறையும்
இதயத்திலான பரிசுப்பொருளை
பாசமாய் கொடுத்து ,என் இரவை
பாடாய்படுத்திவிட்டுசென்றாய்..

எனக்கு வாய்ப்பவள்
கொடுத்து வைத்தவள் என
அடிக்கடி கூறி
அம்மாவுக்கு வைத்திருந்த மிச்ச அன்பையும்
உனக்கே பொழிய வைத்தாய் ..

போடா பொறுக்கி,முகரக்கட்டையென,
செல்ல வார்த்தை பேசி
இதயத்தினுள் மணி அடிக்கச்செய்து
இனிக்க வைத்தாய் ..

ராட்சசியே ..
வேறு வழி தெரியவில்லை
பிரிந்துவிடமாட்டேனென சத்தியம் செய் .
நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன் ...!


அவள் !



தற்செயலாய்தான்

உன் நட்பு
துளிர்விட்டது .

இருநிமிட பேச்சுக்கள்தான்
உன்னுடனான
ஆரம்ப கால சிநேகிதம்

பின் ,
எனக்கான பரிவு வார்த்தைகள்,
உன் உதட்டின் வழியே
வந்தபின் ,

என் மனதின்
உச்சத்தில் நின்றுகொண்டாய் ..

பிடித்த பாடலின் வரிகளை
பிரித்துப் பிரித்து பாட
சொல்லித் தந்தாய்..,

ஒவ்வொரு பண்டிகையையும்
மறவாமல் அறிவிக்க வரும் ,
உன் வாழ்த்து அட்டைகள்
எனக்கு புதியதாய்
அறிமுகமாகின .


மறந்துவிட்டேன் ..
.
.
.
.
.
.
.
இன்னொரு விசயமும்
உன்னால்தான் பழக்கமாகின..

"உன் கணவருடனான இனிய நட்பும்" !

Thursday, November 10, 2011

முதலெழுத்து !

எனது

கவிதைகளின் வரிகளில்,

எங்கோ ஓர் வார்த்தையில்

உன் பெயரின் முதலெழுத்தை

சேர்க்காமல் இருப்பதில்லை.

எதற்காக சேர்த்தேன் ?

நீ என்னை காதலித்த
நன்றிக் கடனுக்காகவா ?

என்னுள் கிடத்திச்சென்ற
உன் நினைவுகளுக்காகவா ?

என் விரல்களி எச்சில் அப்பிய
உன் இனிய முத்தத்திற்காகவா ?

எப்படியோ,

எனது கவிதைகளின் வரிகளில்,

எங்கோ ஓர் வார்த்தையில் ,

உன் பெயரின் முதலெழுத்தை.........
.
.
.
.

.
.
மன்னிக்கவும் ,

உன்னுடன் சேர்த்து

காயத்ரி ,திவ்யா ,ராஜினி....

இவர்களுடைய பெயரின் முதலெழுத்தையும்

என் வார்த்தைகளில் சேர்க்காமல் இருப்பதில்லை !

Tuesday, November 8, 2011

முதல் இடத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி !


ஒரு தொலைகாட்சியை தொடங்கி சில மாதங்களில்  நம்பர் 1 இடத்தை பிடிக்க முடியுமென்றால் ,அது அசாதரணமான விஷயம் ,அந்த விசயத்தை செய்துமுடித்திருக்கிறது புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி !

தமிழகத்தில் செய்திகள் என்றாலே "சன் செய்திகள்" என்று அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தது சன் டிவி ,நாளடைவில் ஜெயா நியுஸ், ராஜ் நியுஸ் ,கலைஞர் செய்திகள்,போன்ற முழு நேர செய்தி சேனல்கள் வந்த போதிலும் ,சன் நியுஸ் சேனலை மட்டுமே பார்த்து வந்தவர்கள் தமிழகத்தில் ஏராளம் !


தமிழகத்தில் என்னதான் நிறைய செய்தி சேனல்கள் இருந்த போதிலும் ,நடுநிலைத்தன்மை என்பது கடுகளவில் கூட கிடையாது .இவர்கள் நினைத்தால் ,அயோக்கியனை கூட உத்தமனாக்கி விடுவது போலவே ,செய்திகளின் லட்சணம் இருந்து வந்தது !இந்நிலையில் ,புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது எந்த கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சி என்பதற்காகவே, செய்திகளை பார்த்தவர்கள் ஏராளம்.ஆனால் ,மக்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே செய்திகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.


ஆங்கில செய்தி சேனல்கள் பாணியில், செய்திகளை தொகுத்து வழங்கிய விதம் ,தமிழக மக்களுக்கு புதிதாக தோன்றியது! அரசியல் நிகழ்வுகளின் அலசல்கள் ,சமூக விழிப்புணர்ச்சி ஆக்கங்கள் என கொஞ்சம் புதிய பாணியில் வழங்கிய விதம் ,பொதுவாக எல்லாருக்குமே பிடித்திருந்தது !இந்நிலையில் தான் நேற்றைய கருத்துகணிப்பு வெளியாகியது.,தமிழகத்தின் செய்தி சேனல்களில் முதல் இடத்தை ,இது வரை தக்கவைத்துக் கொண்டிருந்த சன்நியுஸ் சேனலை ,பின்னுக்கிழுத்து புதியதலைமுறை தொலைக்காட்சி முதல் இடத்தை பிடித்திருக்கிறது !


 புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் !


Friday, November 4, 2011

ராமதாஸ் vs வேல்முருகன்


பல பக்கம் தாவும் கட்சிதான் "பாமக" என்பது நாடறிந்த விஷயம்.அப்படிப்பட்ட கட்சிக்குள்தான் உட்கட்சி பூசல் கிளம்பியிருக்கிறது .சட்டமன்ற படுதோல்வி,உள்ளாட்சி தேர்தலில் வீழ்ச்சி என படுபாதாளத்தில் கட்சி இருக்கும்நேரத்தில் வேல்முருகன் உட்பட மூன்று எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராக தனி ஆவர்த்தனம் நடத்த கிளம்பியிருப்பது ராமாதாசுக்கு தலைவலியை ஏற்ப்படுத்தியிருக்கிறது !
திராவிட கட்சிகளை போன்றே ,தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வளர வேண்டுமென்பதில் பாமகவும் தெளிவாக இருக்கிறது .வேல்முருகன் எம்எல்ஏ தனக்கென்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கை வளர்க்க ஆரம்பித்திருப்பதால் வந்த பிரச்சினைதான் இது .

தன்னை வளர்க்கவும் ,தன் மகனை டெல்லியில் வளர்த்தெடுக்கவும் அவருக்கு வாய்த்த ஜாதி என்ற துருப்புசீட்டை நம்பி இருபது வருடத்தை  ஏற்ற கட்சியை இறக்கங்களுடன் நடத்திவந்த ராமதாசுக்கு இப்போது வந்திருக்கிற சோதனை சத்திய சோதனைதான் !

பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகிறார் என்றால் ,அவர் பேச்சில் அதிகாரியை அடி ,பத்திரிக்கையை எரி, அரசு அலுவலகங்களை பூட்டு என்ற வரிகளை கேட்க்காமல் இருக்க முடியாது ,அப்படிப்பட்ட தலைவனின் பேச்சை கேட்டு வளர்ந்த பாமகவின் எம்எல்ஏக்கள், ராமதாசுக்கே எதிராக கிளம்பியிருப்பதில் ஆச்சர்யமில்லை .

வேல்முருகன் தன பங்கிற்கு ,ராமதாசிற்கு எதிராக சிடி ஒன்ற ஆதாரமாக வைத்திருப்பதாக ஒரு அதிரடி அறிக்கையை அளித்திருக்கிறார் .அதோடு இல்லாமல் அதிமுக ,திமுகவிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பிட்டை முன்பே சாமர்த்தியாக தெரிவித்துவிட்டார் .ராமதாசை நம்பி இன்னுமா அவரிடம் கூட்டம் இருக்கிறது ? என்ற மக்கள் யோசிக்கும் முன்னே ,வேல்முருகனும் தன பங்குக்கு  சில அல்ல்லக்கைகளை இழுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறது.!

ஆறு மாதம் "போட்டி பாமக" என்ற ஒரு லெட்டர்பேட் கட்சியை வைத்திருந்துவிட்டு ,(இந்த மடம் இல்லைனா சந்தை மடம் என்பது போல) திமுக அல்லது ஆதிமுக என்ற கட்சியில் வேல்முருகன் ஒட்டிகொள்வார் என்பதை முழுமையாக மறுப்பதற்கில்லை.

அதுவரை இவர்களின், பொழுதுபோக்கு சண்டையை ,பார்த்து மகிழவேண்டியதுதான் பாக்கி !

Wednesday, November 2, 2011

மாறவில்லையா ஜெயலலிதா ?



எந்த விசயத்தையும் எடுத்தேன் ,கவிழ்த்தேன் என முடிவெடுப்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான் என சொல்லிவிடலாம் !ஆட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்ற துளி பயமில்லாமல் எதையாவது செய்து தொலைப்பது அம்மையாரின் ஆதி குணங்களில் இதுவும் ஒன்று .



நேற்றைய அறிக்கையில் ,சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அதிநவீன குழந்தைநல மருத்துவவமனையாக மாற்றப்படுமென அறிவித்தார் .சில மாதங்களுக்கு முன்புதான் ,கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டார்,அதை செயல்படுத்துவதற்கு முன்னமே மற்றுமொரு மருத்துவமனை என்ற அறிக்கை வந்து விழுகிறது.

இதில் மக்களுக்கான மருத்துவமனையாகத்தானே மாற்றப்போகிறார்கள் என்ற எண்ணத்திற்கு பதிலாக, ஒருவித மனக்கசப்பே தோன்றுகிறது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளை முதலில் சீரமைத்தாலே பெரும்பாலான மக்கள் பயனடையலாம் என்ற நிலை இருக்கையில், கடந்த ஆட்சியாளர்களை பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது.




குழந்தநலப் பிரிவை ஓமந்தூரார் கட்டிடத்திலேயே அமைக்கலாமே ,அங்கு இல்லாத இட வசதியா ?நூலகம்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மேலோட்டமாக காட்டக்கூடிய ஒன்று. இருக்கிற புத்தகங்களை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் மாற்றி செல்லரித்து போவச்செய்வதுதான் வளர்ச்சியா ?

எவ்வளவோ நலத்திட்டங்கள் நிலுவையில் இருக்கையில் ,அதைசெயல்படுத்த முனையாமல் ,எதையாவது தான்தோன்றித்தனமாக செய்வதற்கா உங்களை முதல்வர் வேலையில் பணியமர்த்தினோம் ?கொஞ்சமாவது மாறுங்கள் !


Monday, October 31, 2011

யார் தமிழன்??

இன்றைய நவீன ,சுயநலம் பெருத்துவிட்ட உலகில் ,நம்மை நாமே கேள்விகேட்டுக் கொண்டால் விழும் பதில்களை,கீழே தெரிவித்திருக்கிறேன்!
யார் தமிழன்  ?

பழம்பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு மேற்க்கத்திய மோகத்தில் அலைந்து திரிகிறவன் எவனோ ? ,அவன்தான்

யார் தமிழன்  ?

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்திலும், ஏர்கூலரில் காற்று வாங்கிக்கொண்டே "மழை விட்டும் தூவானம் விடவில்லை "என்ற  வசனத்தை உதிர்த்தவன் எவனோ ? அவன்தான்

யார் தமிழன்  ?

தமிழர்கள் சாகிறார்களே என கேட்டதற்கு ,போர் என்றால் சில அப்பாவி மக்கள் மடிவதும் இயல்பான விசயம்தான் ,என பொட்டில் அறைந்தார் போல் சொல்லத்தெரிந்தவள் எவளோ ? அவள்தான்  


யார் தமிழன்  ?



நம் கருத்திற்கு, எவன் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவனை ஆரிய இனமென்றும்,பார்ப்பன வகையை சேர்ந்தவன் என்று உடனே தீர்ப்பு சொல்பவன் எவனோ ? அவன்தான்



யார் தமிழன்  ?

மூன்று தண்டனைக்குரிய தமிழர்களை காப்பாற்ற ,தூக்கு தண்டனை வேண்டாமென முழங்கியதோடு அல்லாமல் ,ஒரு பகுதி தமிழர்களை கொன்றொழிக்க காரணமாக இருந்த அரக்கன் ராஜபக்ஷேவுக்கும் தூக்கு வேண்டாமென புதிய வழிமுறையை சொல்பவன் எவனோ ? அவன்தான் 

யார் தமிழன்  ?


தமிழனின் பெருமையை பற்றி திரைப்படம் எடுத்தால்,அதனை உலகதரத்திற்கு எடுத்துச் செல்ல முனையாமல் ,அந்த தமிழரையே கிண்டலடித்து ,படைப்பையும் மட்டம் தட்டுபவன் எவனோ ? அவன்தான் ........!




Sunday, October 16, 2011

உள்ளாட்சிதேர்தல், ஒரு கடைசிப் பார்வை!


தமிழகத்தில் உள்ளாட்சிதேர்தலின் கடைசி கட்ட பிரச்சாரம் நேற்றுடன் முடிந்து ,நாளை முதல் ஒட்டுப்பதிவு ,இருகட்டங்களாக நடைபெறவிருக்கிறது !
எல்லா முக்கிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் ,எந்த கட்சி பலம்வாய்ந்த கட்சி என்பது  வாக்கு எண்ணிக்கையில்  தெரிந்துவிடும் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது !

பொதுவாக ஆளும்கட்சிக்குத்தான் உள்ளாட்சிதேர்தல் சாதகமாக அமையும் என்றொரு பேச்சு நிலவுகிறது, அடிதடி அராஜகமென பல உள்ளாட்சித்தேர்தலை மக்கள் பார்த்துள்ளதால், வாக்கு சதவிகிதம் எப்படி அமையப்போகிறது என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற விஷயம் !

ஓட்டுக்காக பணம் கொடுப்பது, குடிமகன்களுக்கு நிதமும் சரக்கு பாட்டில்களை தவறாமல் வினியோகிப்பதென, பெண் வேட்பாளர்களும் ,ஆண் வேட்பாளர்களும் போட்டிபோட்டுகொண்டு செலவழித்து வருகிறார்கள் ! சில வேட்பாளர்கள் தோற்று விடுவோம் என்ற தயக்கத்தில் வெறும் பிட்நோட்டிஸ் மட்டுமே விநியோகித்து கடமையை முடித்திருக்கிறார்கள்
மதிமுக ,பாமக ,விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகளில், போட்டியிட ஆள் கிடைக்காமல் இருந்ததை பல இடங்களில் காண முடிந்தது !


பல கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏல முறையில் முன்பே தீர்மானித்து விட்டார்கள் !மற்றொருபுறம் ஓட்டுக்கு மூவாயிரம் வரை பணம்செலவழிக்கிறார்கள் !(இப்படி செலவுசெய்வது நாட்டுக்கு நல்லது செய்யவா என்று நீங்கள் அப்பாவியாக கேள்வி கேட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல !)எனினும் கட்சி ரீதியாக பார்த்தால் பல அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி ,முதல் மூன்று இடத்தை முறையே ஆதிமுக ,திமுக ,தேமுதிக கட்சிகள் கணிசமான இடங்களைப் பெறும் என்று கணித்திருக்கிறார்கள் !

இதில் பதிவாகும் வாக்குகள்தான் பாமக,தேமுதிக ,விடுதலைசிறுத்தைகள் ,மதிமுக போன்ற கட்சிகளின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கப் போகிறது என்பதால் ,அந்த கட்சிகளும் கொஞ்சம் பயத்துடன் இருக்கின்றன !இந்த வாரம் அவர்களின் வண்டவாளம் தெரிந்துவிடும் !

Monday, August 29, 2011

டிவிட்டரில் _தமிழ் கீச்சர்களின் சண்டை !



கடந்த மூன்று நாட்களாக ,ட்விட்டரில் ,ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது !சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் இந்த மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டதால் ,தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படுகிறது !

இதையொட்டி ட்விட்டரிலும் மரணதண்டனையை எதிர்த்து ஒரு தரப்பிலும் ,மரணதண்டனையை ஆதரித்து மற்றொரு தரப்பினரும் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .
மூன்று நாட்களாக நடக்கும் கருத்து யுத்தம் ,ஒருகட்டத்தில் ,எதிர் கருத்து தெரிவிப்போரை ,ஒரு சிலர் தகாத வார்த்தைகளில் சொல்லி காயப்படுத்த ,இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் ,இரண்டு பிரிவாக பிரிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது !

இதன் உச்சகட்டமாக ,பிரபல கீச்சர் ஒருவர் , விஷயத்தை ஜாதி ரீதியாக அணுக ,அதையும் ஒரு சிலர் ஆதரிக்க ,பிரச்சினை  வேறு தளத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறது !இதையொட்டி  பலபேர் ஒருவரை ஒருவர் ப்ளாக் செய்வதும் ,அன்பாலோவ் செய்வதும் இந்த மூன்று நாட்களில் நடந்தேறியிருக்கிறது.

கருத்து பரிமாற்றம் ,தனி நபர் தாக்குதலாக வடிவமெடுத்திருப்பது ,நடுநிலை ட்விட்டர்கள் இடையே ஒருவித வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது .இதனால் ,பல தமிழ் ட்விட்டர் பயனாளர்கள் எந்தக் கருத்தும் கூறாமல் ,மூன்று நாட்களாக மொத்த ட்விட்டர் டைம்லைனும் ,நெருப்பான வார்த்தைகளில் எரிவதை வேடிக்கை பார்க்கிறார்கள் !

எல்லாவற்றையும் தாண்டி ,தமிழ் கீச்சர்கள் மீண்டும் நட்புடன் திரும்பவேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது !

Wednesday, August 24, 2011

விஜயகாந்திற்கு ஒரு கடிதம் !!



விஜயகாந்த் அவர்களே ! முதலில் உங்கள் பிறந்தநாளுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
மதுரையில் பிறந்து ,திரைத்துறையில் கால் நூற்றாண்டு கோலோச்சிய, சில நடிகர்களில் நீங்களும் ஒருவர், என்பது எங்களுக்குப் பெருமையே !

நடிக்கும் காலத்திலுருந்தே அரசியல் பற்றி தெரிந்துகொண்டீர்கள் . இடைவெளி விட்டு, பகுதி பகுதியாக ரசிகர்களை உருவாக்கிக் கொண்டீர்கள் .ஆறு வருடங்களுக்கு முன்பு கூட, ஹிட் படத்தை கொடுத்தீர்கள் .சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தாலும் ,இப்போது அரசியலில் பொறுத்துப்போவதைபோல் பொறுத்துக்கொண்டீர்கள் ..

சிலர் கூறியது போல ,எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என மழுப்பாமல் ,தெளிவாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினீர்கள் .சொன்னதுபோல் அரசியலில் காலடி வைத்து  ..
நான் ஆட்சிக்கு வந்தால் ,ஐந்து வருடத்தில் சிங்கப்பூராக்கிக் காட்டுகிறேன் என சவால் விட்டீர்கள் ..ஆரம்பத்தில் நீங்களும் கட்சியின் கொள்கை என ஒரு பட்டியலை கொடுத்தீர்கள் ,அதை இன்றைய தமிழன் ,படிக்கக் கூட நேரமில்லாமல் ,கொள்கையே இல்லாமல் ஒரு கட்சி நடத்துகிறார் என அனைவரும் கிண்டல் செய்தார்கள் ..

ஒரு பகுதி மக்கள், உங்களை ஆதரித்தாலும் ,ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் ,உங்கள் கட்சியை பற்றி பேச மறுத்து ஒதுக்கினார்கள் ..அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ,முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து, கணிசமான வாக்குகளை அள்ளி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தீர்கள்! .கருணாநிதியை, நீங்கள் சாடியது போல் ,ஜெயலலிதா கூட சாடியிருக்க மாட்டார் ! ஆனால் அவரும் உங்களைப் பார்த்து பயந்து, குடிகாரர் என ஆரம்பித்து வைத்தார் ,நீங்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து ,அரசியலில் ஒரு படி முன்னேறச் செய்தீர்கள் !ஆனால் ,நீங்கள் எந்தக் கருணாநிதியை எதிரித்து பேச  ஆரம்பித்தீர்களோ ,,அவரைப் போல இரட்டை அர்த்த வசனம் பேசி ,உங்கள் பேரைக் கெடுத்துக் கொண்டீர்கள் !!

அதன் பிறகு ,சட்டமன்ற கூட்டத்திற்கு சில நாள் சென்று ,பல நாள் தோல்விப் படங்களில் நடித்து, பொழுதைக் கழித்தீர்கள். இடை இடையே ,பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து,தொண்டர்களை தக்க வைத்து ,நானும் இருக்கிறேன் என காட்டினீர்கள். இலங்கை  பிரச்சினை தீவிரமாக நடந்தபோது ,மரியாதை ஷூட்டிங்கில் உட்கார்ந்து  ,உங்கள் மரியாதையை கெடுத்துக் கொண்டீர்கள் .!

அதையும் காலப்போக்கில் மறந்து ,நாடளமன்றத் தேர்தலில் ,என்னைப் போன்ற இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்து ,குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை ,தக்கவைத்துக் கொள்ள உதவி செய்தோம் ...பின் கட்சியின் "நலன்"  கருதி கூட்டணி முடிவைப் பற்றி ஜோசியரிடம் ஆலோசித்து ,பரபரப்பை ஏற்ப்படுத்தி ஆதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தீர்கள் ..உங்கள் முதல் கொள்கையே டமாலாகிப் போனதைப் பற்றி நீங்களும் கவலைப் படவில்லை ,நாங்களும் கவலைப் படவில்லை !சட்டமன்றத் தேர்தலும் ஆரம்பித்தது .,,

உங்கள் கட்சியின் சிறப்பே ,,உங்கள் எளிமையான கிராமத்து பேச்சுதான் ,,அதையும் உங்கள் கரகர தொண்டை ,கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியது ,,பாண்டியன் என்ற பாஸ்கரை அடித்தீர்கள் என பிரச்சாரம் செய்தார்கள் ,குடிகாரர் என ஏளனம் செய்தார்கள் ,,எதையும் கண்டுகொள்ளாத உங்கள் மனதைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும் ,,ஆனால் அது மட்டும் போதுமா ? திருத்திக் கொள்ள  வேண்டாமா ??

சொன்னபடியே எதிர்க்கட்சி தலைவர் ஆகி ,உங்கள் மீதான  கவனத்தை அதிகப்படுத்த செய்தீர்கள் !! இதோ ,தேர்தல் முடிந்து நூறு நாட்களாகி விட்டது ! இருபத்தி ஒன்பது எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ,ஒரு செயலில் கூட ஈடுபட முடியவில்லை ..சிலர் சொல்வது போல உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என சொல்கிறார்கள் !! மக்கள் பிரச்சினையில் போராடினால்தானே அதிலும் ஜெயிக்க முடியும் ,என்ற விசயத்தையெல்லாம் உங்களிடம் யார் சொல்வது !!எல்லாக் கட்சிகளும் ,ஏதோ ஒரு பிரச்சினையில் போராட ,பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள  கட்சி ,கிட்டத்தட்ட நூறு நாள் ,ஓய்வெடுத்துக் கொண்டதுபோல் கோமாவில் கிடக்கிறது !

முடிவாக ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,விஜயகாந்த் என்றாலே அதிரடிப் பேச்சுக்கள் ஞாபகம் வரும் ,அந்த, "விஜயகாந்த்" பதவிக்கு முன், இந்த தமிழ்நாட்டில் இருந்தார் !!

Tuesday, August 23, 2011

அன்னாஹசாரே அடித்த சிக்சர் !



காங்கிரசுக்கு "சனி" பிடித்தாலும் பிடித்தது ,அணைத்து காங்கிரஸ் தலைவர்களும் ஆடிப்போயிருக்கிறார்கள்! அன்னாஹசாரே குழுவினர் நடத்தும், கால வரையற்ற உண்ணாவிரதம் ,எட்டாவது நாளை கடந்துள்ளது !நாடு முழுவதும் உள்ள ,பெரும்பாலான மக்கள், இவ்வுண்ணாவிரதத்திற்கு அளித்திருக்கும் ஆதரவால் ,மத்திய அரசு ,மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது !

உண்ணாவிரதம் நடக்கும் ,டெல்லி ராம்லீலா மைதானம் ,மக்கள் வெள்ளத்தால் ,மிதக்கின்றன ! இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ,கொட்டும் மழையிலும் ,மக்கள் மைதானத்தில் தவமிருந்தது போல் ,இருந்தது ,மத்திய அரசை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது !!


தமிழ்நாட்டில் கூட ,ஆங்காங்கே ,தியாகிகளுடன் சேர்ந்து , ஊழலுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினார்கள் !சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,அன்னா ஹஜாரேவின் ,உறுதியான நிலைப்பாட்டிற்கு ஆதரவு தந்து வருகிறார்கள் !உதாரணத்திற்கு ,ஒரு முதிர்ந்த பெரியவர் ,உண்ணாவிரதத்தால் ,மயக்கம் அடைந்த போதும் ,தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது ,அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது !! இன்னும் சிலர் சோனியாவின் வீட்டருகே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் !!

ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடித்தது போல் ,இந்த உண்ணா விரதத்தையும் ,முடித்து விடலாம் என நினைத்த மத்திய அரசு ,அன்னாவை கைது செய்து ,நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது !காவல்துறை அதிகாரிகளே ,,சனி ,ஞாயிற்றுகிழமைகளில் ,குவிந்த கூட்டத்தை பார்த்து ,திணறினார்கள் !நிறைய அதிகாரிகளின் ஷூக்கள் ,தொலைந்து போனது தனிக்கதை !


அமெரிக்கா கூட ,இவ்விசயத்தை கவனித்து வருகிறது ,,ஆனால் எதுவும் தெரியாதது போல ,இது இந்தியாவின் உள்விவகார பிரச்சினை என்று சொல்லி வைத்திருக்கிறது !!முன்னாள் அதிகாரி கிரண் பேடி ,இந்த உண்ணாவிரதத்தில் மிக முனைப்புடன் செயல்படுகிறார் என்பதை ,, ட்விட்டர் இணையதளத்தில் ,அவர் செய்திகளை தருவதிலிருந்தே தெரிகிறது !இன்று காலை ,மன்மோகன்சிங் வீட்டையும் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டார்கள் !


கடந்த முறை ,அன்னா ஹஜாரே நடத்திய உண்ணாவிரதம் ,அணைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது !இந்த முறை ,,பொதுமக்களையும் உண்ணாவிரதத்தில் பங்கு கொள்ள வைத்திருக்கிறது !!
இந்தமுறை  அன்னா அடித்த சிக்சர் ,இந்தியாவைத் தாண்டி விழுந்திருக்கிறது !!

Sunday, August 21, 2011

பெண் பிள்ளைகள் படும் சித்ரவதைகள்



பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ,வளர்க்கப்படும் பாடு சொல்லி மாளாது !!அதுவும் இந்த கலியுக காலத்தில் ,பாலியல் தொந்தரவை சந்திக்காத பெண்களே கிடையாது என்ற சூழ்நிலைக்கு வந்துவிட்டதால் ,பெற்றோர்கள் ,பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர வேறெங்கும் பிள்ளைகளை ,தனியாக அனுமதிக்க பயப்படுகிறார்கள் !!அப்படி பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகள் ,,அங்கேயும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்தால் ??


தமிழ்நாட்டில் மட்டுமல்ல ,இந்தியா முழுவதுமே ,பெண் மாணவிகள் ,,குறிப்பாக எட்டாம் வகுப்பு ,ஒன்பதாம் ,,பத்தாம் வகுப்பு மாணவிகளை குறி வைத்து ,,அந்த பள்ளிகளின் ஒரு சில  ஆசிரியர்களே பாலியில் தொந்தரவுகளைத் தர ஆரம்பித்து விடுகிறார்கள் !!இதனால் அம்மானவிகளின் கல்வி பெருமளவு பாதிக்கப் படுகிறது !!

இந்த தொந்தரவுகளை சகிக்காமல் ,பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட்டவர்கள் ,இந்தியாவில் அநேகம் பேர் !
சில பிள்ளைகள் ,எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ,ஆசிரியர்களுக்கு தன்னை இரையாக்கி ,ஆண்கள் என்றாலே  வெறுப்பை கக்குகிறார்கள் ! சிறு வயதிலேயே அவர்கள் யாருடனும் பேச பயப்பட்டு தனிமையின் துயரை அனுபவிக்கிறார்கள்  !

சில வருடங்களுக்கு முன்பு ,ஆசிரியர் ,ஒருவர் ,பெண்ணை கற்பழித்து விட்டு ,தன் சக ஆசிரியர்களுக்கும் ,,அவளை  இரையாக்கிய கொடுமை ,இந்திய தேசத்தில்தான் நடந்தது !! வயதான ஆசிரியர்களும் ,,,இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது !!


பெண்மாணவிகள் ,ஆசியர்களின் செய்கைகளை ,,ஆரம்பித்தேலேயே கண்டித்திருந்தால் ,,இது போன்ற சம்பவங்கள் ,ஓரளவேனும் குறைய வாய்ப்பிருக்கிறது !!சில ஆசிரியர்கள் ,மாணவிகளுக்கு ,,மதிப்பெண்களை கூட்டுகிறேன் என்று ஆசை காட்டி ,,தன் தொந்தரவுகளை ஆரம்பிக்கிறார்கள் !!

இதைத்தடுக்க ,,பெண்மாணவிகள் ,தைரியமாக முன்வந்தால் தீர்க்கலாம் !! ஆனால் ,இந்தியாவில் ,பெண்கள்,, ,,எங்கே  நம் மீது ,அவப்பெயர் ஏற்பட்டு விடுமோ என்றே  அஞ்சுகிறார்கள் !வேலியே பயிரை மேயும் இக்கலாச்சாரம் ,வேரறுக்கப்படுவது எப்போது ??

Wednesday, August 17, 2011

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா ??



கடந்த மூன்ற டெஸ்டிலும், மரண அடி வாங்கிய இந்திய அணி ,இன்று நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட்டில் ,ஆறுதல் வெற்றியைப் பெறுமா ?என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது !!

முதல் இடத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்து ,பரிதாபமாக காட்சியளிக்கும் இந்திய அணியின் வீரர்கள் ,,ஒருவராவது நல்ல பார்மில் இருக்கிறார்களா?என்றால் கேள்விக்குறிதான் பதிலாக வருகிறது !! கடந்த மூன்று டெஸ்டிலும் ,,ஒரு இன்னிங்சில் கூட "முந்நூறு" ரன்களை தொடாத அவல  நிலையே நிலவியது !!


அணியின் பயிற்சியாளர் ப்ளட்சேர் ,,தான் பயிற்சியளிக்கும் முதல் தொடரில் ,,இந்திய அணியின் ஆட்டம் ,,இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார் !! இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட ,,இந்திய ஆணிக்கு இது ஒரு தற்காலிக பின்னடைவு என்று சப்பை கட்டு ,கட்டுகிறார்கள் !!

அடி பட்ட பூனை எழும்புகிறதா ?/இல்லை மீண்டும் தர்ம அடி வாங்குகிறதா ??,, இன்று தெரிந்துவிடும் !!

Tuesday, August 16, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!


பிறப்பு முதல் இறப்பு வரை ,ஜாதி என்ற ஒரு விஷ ஜந்து,, நம்மை அலைக்கழிக்கும் விதம் பெரிய மலைப்பை உண்டாக்குகிறது !!ஒன்றாய் படிக்கும் பள்ளித்தோழர்களே ,பின்நாட்களில் தன் ஜாதியின் வீரியம் தெரிந்து ,அடித்துக்கொள்ளும் காட்சியை, தமிழகம் நிறைய பார்த்திருக்கிறது !

தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் இல்லாத வருடங்களே கிடையாது !!என் வீட்டில் கூட ,, இரு ஜாதிகளின் பெயர்களை சொல்லி ,, அவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளாதே என அறிவுறுத்தப்பட்டே வெளியே அனுப்பி வைக்கிறார்கள் !!

சில வீடுகளில் ,,தன் பிள்ளைகளின் பிஞ்சு வயதிலேயே ,ஜாதியின் வீரியத் தன்மையை ,,விஷமென்று அறியாமல் விதைத்து விடுகிறார்கள் !! பின்நாட்களில் அந்த பிள்ளைகள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் ,,ஜாதிக்கலவரம் என்று வந்துவிட்டால் ,தன் ஜாதியின் பக்கம் சேர்ந்துவிடுகிறார்கள் .

சில நண்பர்கள் ,,இதற்க்கு விதிவிலக்கு என்றாலும் ,,சமூகம் அவர்களையும் ஜாதிப் பிடியில் சிக்கவைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் !! தென்மாவட்டங்களில் ,குறிப்பாக ,,ராமநாதபுர மாவட்டத்தில் ,ஜாதி மோதல்களால் ,வருடத்திற்கு இரு கொலைகள் வீதம் ,,தவறாமல் நடக்கிறது .

குறிப்பாக ,,சில விசேஷ நாட்களில் ,,காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி , ஜாதி மோதல்கள் எழுந்துவிடுகிறது!
கடைகளை சூறையாடுதல் ,,வீடுகளுக்கு தீ வைத்தல் ,,போன்ற பழ விஷயங்களை ,,ஜாதி வெறியர்கள் நிகழ்த்திவிடுகிறார்கள் !!


ஆட்சியாளர்களும் ஜாதி ஓட்டுக்கள் போய்விடும் என்ற அல்ப ஆசைக்காக ,,தமிழகத்தில் ஜாதி வெறியர்களை ,கண்டுகொள்ளாமல் விடுகிறது ,,ஒட்டு மொத்த தமிழகமும் ,,பாரதியின் ,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலின் ,,இரண்டாம் வார்த்தையை  மாற்றி எழுதி, பல வருடம் ஆகிவிட்டது !!

Monday, August 15, 2011

மதுரையில் நடந்த ட்விட்டர் சந்திப்பு !!


நீண்ட நாட்களாக திட்டமிட்ட மதுரை ட்விட்டர் சந்திப்பு ,இனிதே நடைபெற்று முடிந்தது ! இதற்க்காக பல பேரையும் அழைத்திருந்தோம் ,முக்கியமாக மதுரையை சுற்றியுள்ள  ட்விட்டர்கள் அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது ! அனைவரும் வந்து சந்திப்பை கலகலப்பூட்டினார்கள்!! இனி நிகழ்ச்சியின் சில துளிகள் ,,

1)இந்த சந்திப்புக்கு ,முழு முதல் காரணம் , டாக்டர் ரியாஸ் அஹமது அவர்கள்தான் ! அவர் எடுத்த முழு முயற்சியை ,,நேற்று அனைவரும் பாராட்டினார்கள் !
2)மற்றொன்று ,,பதிவர்கள் மூன்று பேர் ,,சிறப்பு விசிட் அடித்தார்கள் ! அவர்களுடைய அனுபவப் பேச்சை கேட்டு ரசித்தோம் !


சின்னபையன் அவர்கள் ,எழுதிய வாழ்த்துமடல் ,,அணைத்து ட்விட்டர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது !
பின் அனைவரின் சுய குறிப்புகளை பகிர்ந்துகொண்டார்கள் ! நிறைவில்  ஸ்வீட் ..,காரம் ,,பரிமாறப்பட்டது!

இன்னும் பலர் ,சந்திப்புக்கு வர திட்டமிட்டிருந்தார்கள் ,,சில காரணங்களால் இயலவில்லை என தெரிவித்து விட்டார்கள் !


எது ,எப்படியோ ,,இந்த  ட்விட்டர்கள் சந்திப்பு ,,அடுத்த சந்திப்பில் கலந்துகொள்ள ,,நிறைய ட்விட்டர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை !!

Saturday, August 13, 2011

மாண்புமிகு சட்டசபை உறுப்பினர்கள் !


நாம் தேர்ந்தெடுக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ,,ஒழுங்காக கடமையை செய்கிறார்களா ? என்பதை, எல்லாம் மக்களும் நினைப்பதில்லை ,,அந்த உறுப்பினரும் நினைப்பதில்லை !

பொதுவாக தமிழகத்தில் ,,சட்டசபை உறுப்பினர்கள் ,,அவர் கட்சி சொல்வதைத்தான் கேட்கிறார்கள்  ..தனி மனிதனாக ,,தன் தொகுதியின் ,பிரச்சினையை ,நினைத்த உடனே ,சொல்லிவிட முடியாது ..இரு  திராவிட கழகங்களின் கட்டுப்பாட்டில்தான்  ,இந்த உறுப்பினர்களின் வாயசைவுகள் இருக்கும் !!

மற்றொன்று ,,கட்சியே ,சில நேரத்தில் பேச அனுமதி கொடுத்துவிட்டாலும் ,,இவர்கள் வாயை திறந்து ,,தொகுதி பிரச்சினையை ,,சட்டசபையில் பேசுவதே இல்லை ,,சில உறுப்பினர்கள் ,பணத்தால் எம் எல் ஏ ,சீட்டை ,வாங்கியதால் ,,அவர்களுக்கு என்ன பேசுவதென்றே ,தெரியாது !
மூத்த உறுப்பினர்கள் பேச்சை கேட்டு ,,பழகும் இளம் எம் எல் ஏக்கள் என்று தமிழகத்தில் ,யாருமே இல்லை !  நிறைய ,உறுப்பினர்கள் ,சட்டசபை நிகழ்சிகளில் ,,சில நாட்கள் மட்டும் வந்துவிட்டு போவார்கள் !  பல பேர் ,,கலந்துகொள்வதே இல்லை !கையெழுத்து மட்டும் போட்டு ,சம்பளத்தை இடது கையால் பெற்றுக்கொண்டு ,,கிம்பலத்தை வலது கையால் ,,பல பேரிடம் பெற்றுக்கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் !


இப்படிப்பட்ட மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம்  ,,நீங்கள் சட்டசபை முழக்கத்தை ஞாபகப்படுத்தினால் ,,உங்களை பைத்தியக்காரர் ,என்று சொல்லாமல் வேறென்ன சொல்வார் !!

கனிமொழிக்கு தொடர்பில்லை


தலைப்பைப் பார்த்தவுடன் ,விவகாரமாக நினைத்துவிடவேண்டாம் ! கனிமொழி நேற்று கொடுத்த அறிக்கையில் ,,கலைஞர் டிவிக்கும் ,எனக்கும் தொடர்பில்லை ,,என்றார் !

போகிற போக்கைப் பார்த்தால் ,,இன்னும் என்னென்ன சொல்வார் என்று நினைத்து பார்க்கத் தோன்றுகிறது 

1) பங்குகள்தான் என்னிடம் இருக்கின்றன ,,கலைஞர் டிவியில் பங்கில்லை !

2)கலைஞரை அப்பா என்றுதான் சொல்வேன் ,,அதற்காக அவர் எனக்கு அப்பாவாக இல்லாமல் போய்விடுவாரா ??

3)ராசா எனது நண்பர் மட்டுமே ,,ஆனால் அவர் வீடு வரை செல்ல ,எனக்கும் உரிமை உண்டு !


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !வர வர ,,கனிமொழி ,,கலைஞர் போல பேச ஆரம்பித்துவிட்டார் !!

Friday, August 12, 2011

ப்ளூரே தரத்தில் படங்களை தரவிறக்க !!

நம்மில் பலரும் ,,ஆங்கில படங்களை பார்க்கத் தவறுவதில்லை ,அதை சப்டைட்டிலுடன் ,,ப்ளூரே தரத்தில் கிடைத்தால் ??


அப்படி நமக்குத்  தர ஒரு புண்ணியவான் இருக்கிறார் ,,புதுப்படங்களை நல்ல குவாலிட்டியுடன் பலர் தந்தாலும் ,,நமக்கு ஆங்கிலப் படங்களை .,சப்டைட்டில் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது (அட ,எனக்கும்தாங்க )..இந்த சுட்டியில்  http://thepiratebay.org/user/YIFY/  ,தரமான குவாலிட்டியில் ,,குறைந்த அளவு எம்பியுடன் ,,மால்வேர் தொந்தரவுகள் இல்லாமல் ,,படங்களை தரவிறக்கிக் கொள்ள முடியும் !!

டோர்ரென்ட் அப்ளிகேசன் ,,இல்லாதவர்கள் ,,முதலில் அதை தரவிறக்கிக் கொள்ளுங்கள் !!    http://www.utorrent.com/

அண்ணா ஹசாரேவின் சொதப்பல்கள் !


பல ஊழல்கள் ,,கருப்பு பண விவகாரத்திற்கு, எதிராக நாடே சலிப்படைந்திருந்த போது,சமூக சேவகர் ,அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து ,அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் !

அப்படிப்பட்ட அண்ணா ஹசாரேவின் இன்றைய நடவடிக்கைகள் திருப்தியை தரவில்லை .அண்ணா ஹசாரே குழு தயாரித்த அறிக்கையை அரசு ஏற்காமல் ,தானாக ஒரு லோக்பால் வரைவுச் சட்டத்தை முன் வைத்தது ! அண்ணா ஹாசாரே முதலில் முரண்டு பிடித்து ,,சிறிய திருத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர் !

பின்பு ,இதை ஏற்க மறுத்த அண்ணா ஹசாரே ,மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார் ..மீண்டும் இரு தரப்புக்கும் இழுபறி ,இதனிடையே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் ,எந்தப் பலனும் ,,பதிலும் கிடைக்கவில்லை !

பின் நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ,லோக்பால் அறிக்கையின் நகலை ,பொது இடத்தில் கூடி எரித்தார்கள் ,பின் சோனியாவுக்கு ,,காங்கிரசின் உறுப்பினர்களை பற்றி குறை சொல்லி கடிதம் எழுதினார் !

எங்கள் குழுவின் அறிக்கை ஏற்கவில்லை என்றால் ,,ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார் ,,பின் காலவரையற்ற உண்ணாவிரதம் என்றார் !இன்று காலை ,,மூன்று நாட்களுக்கு மட்டும் உண்ணாவிரதம் என்கிறார் ,,எந்த இடத்திலும் தான் உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றார் ..ஒரு நேரத்தில் ,அரசின் பேச்சை கேட்க முடியாது என்றார் ,பின் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்கிறார் !

முன்பு நரேந்திர மோடியை புகழ்ந்தார் ,,எதிர்ப்பு வரவே ,,அவரை உதறிவிட்டு ,சோனியாவை புகழ்ந்தார் ,,!! மன்மோகன் நல்லவர் ,ரிமோட் தான் சரியில்லை என்றார் !வர ,வர , அரசியல்வாதிகள் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் போல ...நம்ம ராமதாசே இவரிடம்  தோற்றுவிடுவார் !!

பலே பலே ,,நடத்துங்க அண்ணா ஹசாரே !!

Thursday, August 11, 2011

நாயக்கர் மஹாலை கெடுத்த சினிமா குழுவினர் !


மதுரையில் பெருமை வாய்ந்த பொக்கிஷங்கள் இரண்டு ! 1 . மீனாட்சி அம்மன் கோவில் ,,2. திருமலை நாயக்கர் மஹால் !

இவ்விரு பொக்கிஷங்களையும் ,,முடிந்த மட்டும் பாழ்படுத்தி விட்டார்கள் நம்மூர் யோக்கியவான்கள் .முன்பெல்லாம் மீனாட்சி அம்மன் கோவில் வெளிவாசல் வரை ,,லாரிக்காரனும் ,,ஆட்டோக்காரனும் உரசிக்கொண்டு போவார்கள் ! பல முறை மனு கொடுக்கப்பட்டதால் ,அங்கு வாகன உபயோகம் தடைசெய்யப்பட்டு ,தாமதமாக புண்ணியம் தேடி கொண்டார்கள் !

திருமலை நாயக்கர் மஹாலை ,,மதுரைக்கார்களே பொக்கிஷமாக ,நினைக்கத் தவறிவிட்டார்கள் !! ஏதோ சினிமாக் காரர்களுக்கு மட்டுமே உபயோகப்படுகிற விஷயம் என நினைத்து விட்டார்கள் போலும் ..சினிமாக் கார்களுக்கு குறைந்த செலவில் வாடகைக்கு ,இந்த மஹால் கிடைத்து விடுகிறது !ஏற்கனவே பொக்கிஷங்கள் பலவற்றை ,கால இடைவேளையில் இழந்த நாயக்கர் மஹால் ,படப்பிடிப்பு  .குழுவினரால்  முற்றிலுமாக பாழ்பட்டு விட்டது .அவர்கள் பாதி தரைத்தளங்களை பெயர்த்து விட்டார்கள் ..

மகாலின் மேற்புறம்  செட் போடுகிறேன் ,பேர்வழி என்று ஒருவழி பண்ணிவிட்டார்கள் ,,கேட்கத்தான் நாதியில்லை ,,மிகப்பெரிய   தூண்களில் ,கலர் துணிகளை கட்டி ,அதன் பளபளப்பை குறைத்து ,அதன் முக்கிய சாராம்சத்தையே இல்லாமல் செய்துவிட்டார்கள் .
மிகவும் தாமதமாக விழித்துக்கொண்ட மதுரை வக்கீல் ,கிளை நீதிமன்றத்தில் ,,படப்பிடிப்பு நடத்த தடை ஆணையை ,பெற்றிருக்கிறார் !

"மஹால் மீண்டும் பழைய பொலிவைப் பெற ,நாயக்கரே மீண்டும் உயிர்த்தெழுந்தால்தான் உண்டு "!

போலீஸ்காரரும் ,புதுப் பட டிவிடியும் !!



காவல்துறையில் ஒழுக்கசீலர்கள் என்ற விசயமெல்லாம் ,,பொதுமக்களே மறந்த போன விஷயம் ..அதனால் அதை விட்டுவிடுவோம் .நான்  .சொல்லப்போகும் காவல்காரரின் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது ..மதுரை வீதிகளில் ,நெரிசல் மிகுந்த பஜாரில் ,இவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்  வேலையில் இருக்கிறார் ..இவரின் ஆசையே மிகவும் அல்பமானது ...அது என்னவென்று பார்க்கும் முன்  ...
  
போன மாதம் வரை ,மதுரை வீதிகளில் ,திருட்டு டிவிடி கடைகள் ,சந்துபொந்தெல்லாம் நிறைந்து கிடந்தன ,,எல்லா டிவிடிக்களுமே பதினைந்து ரூபாய் ,,இருபது ரூபாய் வீதம் புதுப்படங்களை கூறு போட்டு விற்று கொண்டிருந்தார்கள் ,,

நம் ஏட்டு ,,என்ன செய்வார் என்றால் ,,பெரிய அதிகாரிகள் ,,ரெய்டு என்று வரும்போது ,,முன்கூட்டியே தகவலை , திருட்டு டிவிடி விற்பவர்களிடம் கூறிவிடுவார் .. அதற்க்கு சன்மானமாக புதுப்பட டிவிடிக்களை இலவசமாக அள்ளிச்செல்வார் ,,இதனால் டிவிடி கடைக்காரர்களின் பிழைப்பு பிழையில்லாமல் இருந்தது ..

அதோடு விடுவாரா நம் ஏட்டு ,,பலான பட டிவிடிக்களை ,,மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்வார் ,,அதற்க்கு அவர் உச்சரிக்கும் வார்த்தையை சொல்லியாக வேண்டும் ,,,"சாவு இருக்கா " என்றுதான் கேட்பார் !! தினமும் புதுவிதமான காட்சியுள்ள டிவிடிக்களையே இலவசமாக வாங்குவார் ....இப்படி இவர் வாங்கிய டிவிடிக்கள் ஆயிரத்தை தாண்டும் !புரியுதோ புரியவில்லையோ ,,ஹாலிவுட் பட டிவிடிக்களையும் வாங்கிக்குவார் ..

யார் கண் பட்டதோ தெரியவில்லை ,,அவர் பிழைப்பில் மண் விழுந்தது ,,ஆட்சி மாறியது ,,காட்சியும் மாறியது ,  புதிய ஆதிகாரிகள் ,,மதுரையில் உள்ள திருட்டு டிவிடிக்கள் கடையை முற்றிலுமாக மூடச் செய்தார்கள் !! நடத்திய ரெய்டில் இரண்டாயிரம் டிவிடிக்கள் கைப்பற்றப்பட்டன !!

இன்று நம்  ஏட்டு என்ன செய்கிறார் தெரியுமா?? ,,கைப்பற்றிய ரெண்டாயிரம் திருட்டு டிவிடிக்களை அதிகாரிகளின் வீட்டுக்கு சப்ளை செய்து வருகிறார் !!

பிரபலமான பதிவுகள்