Loading

Thursday, January 19, 2012

நீ



கருப்பு ஆடைகளை
உன் போல்
எவரேனும் உடுத்தியிருந்தால்.

நீ முனுமுனுக்கும்
அழகான பாடலை
எவரேனும் உச்சரித்துகொண்டிருந்தால்..

எனக்குப் புரியாத
உன் மவுன அழுகையை
எவர் முகத்திலாவது பார்க்க நேர்ந்தால் ..

உன்னை ஏமாற்றி வாழும்
இந்த உயிர்
வலி எடுத்துக் கொல்லும் ..:-(

மவுனகுரு (சினிமா விமர்சனம் )



பொதுவா பலருக்கு ,திரைப்படம் ஆரம்பித்த உடனே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என நினைப்பார்கள் ,நானும் அந்த ரகம்தான் .
அந்த வகையில் மவுனகுரு திரைப்படத்தை ,கதையுடன் ஆரம்பிக்க வேண்டுமென்றால் ,படத்தின் நாற்பதாவது நிமிடத்தில் இருந்து பார்க்கத்
தொடங்கலாம் ,முதல் நாற்ப்பது நிமிடம் ,நீங்கள் படம் பார்க்காவிட்டாலும், கதையின் மையக்கரு உங்களுக்குப் புரிந்துவிடும் .நாற்பதாவது நிமிடத்தில்
ஆரம்பிக்கும் விறுவிறுப்பான திரைக்கதைதான் இந்த படத்தின் முக்கிய அம்சம் .

இனி கதையை பார்க்கலாம் ,

நான்கு போலீஸ்காரர்கள் ,ஹைவேஸ் சாலையில் இருக்கிறார்கள் ,படு வேகமாக ஒரு கார் ,அவர்களை கடந்து சென்று ,நிலை தடுமாறி சிறு பாலத்தின் மீது
மோதி விபத்துக்குள்ளாகிறது. நான்கு போலீஸ்காரர்களும் ,விபத்தான காரை பார்க்கிறார்கள் ,கார் டிக்கியில் கோடிக்கணக்கான
பணம் இருக்கிறது ,வழக்கம்போல் போலீஸ்காரர்களுக்கு சபலம் தட்டுகிறது ..காரின் உள்ளே இருந்தவனை கொன்றுவிட்டு
பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

கார் விபத்தில் பலியானவன் என்று போஸ்ட்மோடம் ரிப்போர்ட் தயாரிக்கச் சொல்லி ,நான்கு போலிஸ்காரர்களில் ஒருவர்,ஹோட்டலில் இருந்து உத்தரவிடுகிறார்
இதை உரையாடலை வீடியோவாக எடுத்து ,பணத்தை அபேஸ் செய்ய அந்த போலீஸ்காரரின் வைப்பாட்டி முடிவெடுக்கிறார்.
இதற்காக மேற்கொண்டு கலந்தாலோசிக்க ,காபி ஷாப்பில் அவளும் ,அவளின் இரு நண்பர்களும் கூடி ,வீடியோ விஷயத்தை பேசுகிறார்கள்.இதைப்  பார்த்துவிட்ட ,ஒரு கல்லூரி மாணவன்
அந்த வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு போய், தனியாக ஒரு மொபைல் மூலம் போலீஸ்காரனை மிரட்டுகிறான் .


உடனே பதறிய அந்த நான்கு போலீஸ்காரர்களும், வீடியோ எடுத்த போலீஸ்காரரின் வைப்பாட்டியை தூக்கில் தொங்க விடுகிறார்கள் 
.இந்த தூக்கு விவகாரத்தை ,மற்றொரு காவல்துறை பெண் அதிகாரி விசாரிக்க வருகிறார். 
விசாரணை முடிவதற்குள் ,அந்த வீடியோ ஆதாரத்தை அழிக்கவேண்டும் என்பதால் ,நான்கு போலீஸ்காரர்களும் 
கல்லூரி வளாகத்தில் விசாரிக்கிறார்கள் ,அப்படி விசாரித்துக்கொண்டு இருக்கும்போதுதான் ,கதையின் ஹீரோ அருள்நிதி ரூம் வாசலில்  ,ஒரு பேக் கிடைக்கிறது.இதைப் பார்த்துவிட்ட 
போலீஸ்காரர்கள் ,பேக்கில் வீடியோகேமரா  இருப்பதைக்கண்டு ,அருள்நிதிதான் நம்மை மிரட்டியவன் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
அருள்நிதியையும் ,ஏற்கனவே விசயம் தெரிந்த ,வைப்பாட்டியின் இரு நண்பர்களையும் சுட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்கள் .இதில் அருள்நிதி ஒருவழியாக தப்பிக்கிறான் .
அந்த நேரத்தில் தப்பித்தாலும் ,மீண்டும் அந்த போலீஸ்காரர்கள் அருள்நிதிக்கு விஷயம் தெரிந்துவிட்டதே என எண்ணி 
அவனை ,மனவளர்ச்சி குன்றியவன் போல சித்தரிக்கிறார்கள் .அதில் இருந்து அருள்நிதி தப்பித்தானா ?
 அந்த பெண் காவல்துறை அதிகாரி ,விசாரனையின் என்ன கண்டுபிடித்தார் ? கார் விபத்தில் கிடந்த பணம் யாருடையது என்பதை , சில பல திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.

கதையில் ,கிளைக்கதையான அருள்நிதி _இனியா காதல் ,குடும்ப உறுப்பினர்களின் அறிமுகக் காட்சிகள் ,கல்லூரியில் ஏற்படும் மாணவர்கள் சண்டை ,இவையெல்லாம்  ,கதையின் வேகத்திற்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தாலும் ,படத்தின் நீளத்தை இழுக்க  பயன்படுகிறது. .அருள்நிதிக்கு ,சொல்லிகொள்ளும் அளவுக்கு நடிப்புத்திறமை
இல்லாவிட்டாலும் ,கதைக்கு நன்றாகவே பொருந்துகிறார். ஒரு 
பரபரப்பான சஸ்பென்ஸ் திரைப்படத்திற்கு  ,மவுனகுரு கண்டிப்பாக நல்ல சாய்ஸ்தான் ..

Wednesday, January 18, 2012

புராண நாடகங்கள் :ஒரு பார்வை.




கிராமத்து திருவிழாக்களை இன்றும் ,உயிர்ப்புடன் வைத்திருப்பது , இரவு நேரம் நடைபெறும் வள்ளித் திருமணம் , வீரபாண்டிய கட்டபொம்மன், சில நேரங்களில் பகத்சிங்
மற்றும் ராமாயணத்தின் வனவாசப்பகுதி போன்ற வரலாற்று நாடகங்கள்தான்.
வரலாற்றை அதன் கதைப் போக்கில் , கேட்பது ,மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
அப்படிப்பட்ட நாடகங்கள் , கடந்த பத்து வருடங்களாக ,ஆபாச வசனங்கள் மூலம் ,கதையை நகர்த்தும் விதம் கவலையளிக்கிறது.

எடுத்த எடுப்பில் ,பபூன் என்ற கோமாளி வேடத்தில் வந்து , பெண்களை இழிவுபடுத்துவதும், தாம்பத்திய விசயங்களை வெட்ட வெளிச்சமாக ,வீதிக்கு
கொண்டுவருவதும் ,மக்களிடையே நகைச்சுவை உணர்வை தூண்டுகிறேன் என்ற பெயரில் ,மக்களின் ரசனையை மிகவும் மட்டமாக்கி விட்டார்கள்.

சமீபத்தில் வள்ளித் திருமணம் என்ற ஒரு புராண நாடகத்தை பார்க்க நேர்ந்தது. முருகனின் அறிமுகப்படலம் இவ்வாறு தொடங்கியது.

அவர்(முருகன் ) யார் தெரியுமா ,
 அவர் நடந்தா சூறாவளி ,
அடிச்சா கில்லி ,
பிடிச்சா உடும்புப்பிடி என்ற
 போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார்கள்
சமீபத்திய திரைப்பட வசனங்களை ,தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பேசுவது போல் நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்..



அதோடு இல்லாமல் , முருகன் ,வள்ளி ,சந்திப்பின்போது ,
முருகன் வள்ளியை பார்த்து பாடுகிறார்.. why this kolaveri di என .அடுத்தபடியாக நாரதர் ,முருகன் ,வள்ளியை இணைப்பதற்காக
வள்ளியை பார்த்து ,முருகனின் ஆண்மை திறனை வியந்து , ஆபாசமாக விவரிக்கிறார். அவர்களைச் சொல்லி குற்றமில்லை,
ஆபாசப் பேச்சை ,பெருவாரியாக நுழைத்தால்தான் நாடகம் சிறப்பாக இருந்தது என்ற பெயர் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக
அப்படி செய்கிறார்கள்.

இந்த ஆபாசப் பேச்சுக்களை ,தவிர்த்துவிட்டு பார்த்தால் ,நாடகக் கலை வியக்க வைக்கிறது. பாடல்கள் ,பதினான்கு பக்க அளவில் உள்ள
வசனங்களை அனாயசமாக சொல்கிறார்கள்.. திரைக்கதையை இவர்கள் நகர்த்தும் விதம் ,மிகவும் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சினிமா நடிகர்கள் ,ஒரு வரி வசனங்களை கூட ,
பல முறை சொல்லி பயிற்சி எடுத்தும் சொதப்புகிறார்கள். அந்த வகையில் ,கூத்துப்பட்டறை நடிப்பு பயிற்சியை விட ,நாடகங்களில் நடிக்கும் நடிகர்கள் ,ஒரு படி மேலேதான்
இருக்கிறார்கள்.

தேசியவிருது இத்யாதி கவுரவிப்பு எல்லாம் ,இவர்களின் திறமையை பார்த்து பிச்சைதான் எடுக்க வேண்டும்.
பல கிராமங்களில் ,ஆடல் பாடல் ,சினிமா குத்தாட்ட நிகழ்ச்சிகள் ,நாடகத் துறையை அழித்து வருவதால்தான்
ஆபாச பேச்சுக்களை ,நாடகத்தில் சேர்ப்பதாக நாடகக் குழுவினர் சொல்கிறார்கள்.. பல துறையில் ,சீரழிந்து விட்ட தமிழகம் ,நாடகக் கலையை
பெருமளவு ஆபாசப்படுத்தி இருப்பது வேதனைக்குறியது.

Monday, January 16, 2012

நண்பன் (சினிமா விமர்சனம் )


ஹிந்தி திரைப்படத்தை ரிமேக் செய்து எடுக்கப்பட்டிருந்தாலும் ,பெருவாரியான மக்கள் ,ஹிந்தி படத்தை பார்க்காததால் ,நண்பன் அனாயசமாக ஹிட் அடித்திருக்கிறது.
நம் கல்விக் கொள்கையை சாடுவதுதான் , நண்பன் திரைப்படத்தின் கதைக் களம். அதை நையாண்டி செய்து சொல்லப்பட்டதுதான் மிகவும் ரசிக்க வைக்கிறது.
நம் ஊரில் ,கணக்குப் பாடத்தை கூட ,மனப்பாடம் செய்து படிக்கும் ,பிள்ளைகளை இன்றும் பார்க்க முடிகிறது. அவர்களுக்கும் ,அவர்களின் பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் புரியும்படியாக கதையை நகர்த்திய விதம அருமை .


ஸ்ரீகாந்த் , ஜீவா ,விஜய் மூவரும் கல்லூரி நண்பர்கள் .ஸ்ரீகாந்த்துக்கு போட்டோகிராபர் ஆக வேண்டும் என்பது ஆசை ,பெற்றோரின் அழுத்தத்தால் இன்ஜினியரிங் படிக்க வருகிறார் ,
ஜீவாவின் குடும்பம் வறுமையில் இருப்பதால் ,மன அழுத்தத்துடன் படிக்க வருகிறார்.இவர்கள் இருவருக்கும் ,புரிஞ்சி படிச்சா ஜெயிக்கலாம் என எடுத்துச் சொல்கிறார் விஜய். 
கல்லூரியின் முதல்வர் சத்தியராஜ் , மாணவர்களை படி படியென எந்நேரமும் நச்சரிக்கிறார். இது பிடிக்காத விஜய், படிப்பு முறையை மாற்ற வேண்டுமென ,சத்யராஜுக்கு அட்வைஸ் செய்கிறார். இதனால் ஆத்திரமுற்ற சத்தியராஜ் , விஜய்யின் நண்பர்களை பிரிக்க முயற்சி செய்கிறார். 
அது தோல்வி அடைகிறது. ஒரு நேரத்தில்  விஜய் செய்த விளையாட்டால் காயமடைகிறான் சத்யன் என்ற கல்லூரி நண்பன் . இதனால் ஆத்திரமுற்ற சத்யன் , விஜய்யிடம் சவால்  விடுகிறான் .

பத்து வருடம் கழித்து நாம் சந்திப்போம் ,அப்போது யார் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார்களோ , அவன்தான் பெரியவன் என்று சவால் விடுகிறான் . பத்து வருடம் கழித்து ,

சத்யன் 
ஸ்ரீகாந்த் ,ஜீவாவுடன் , விஜய்யை தேட கிளம்புகிறார்கள் , அங்கு போய் பார்த்தால் விஜய் இல்லை .. விஜய் என்ன ஆனார் ? யார் ஜெயித்தார்கள் என்பதை ,நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள் .
சத்தியராஜுக்கு புதுமையான கதாபாத்திரம் .. செம அழகாக பொருந்துகிறார். நடை ,உடல் மொழி என பின்னுகிறார் . விஜய் ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்துக்கு இந்த திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரம்தான் ,அவர் பார்வையில்தான் கதையே நகர்கிறது. ஜீவா  இரண்டாம் பாதியில் மனம் நெகிழ வைக்கிறார். சத்யன் காமெடியில் பின்னுகிறார்,அந்த மேடைப் பேச்சில் தூள் பறத்துகிறார்.சின்ன கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா வருகிறார்.
சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ,அது பெருசா ஒன்னும் இடிக்கலை.

கதாநாயகி இலியானா ,படத்தின் நேரத்தை நகர்த்த பயன்பட்டிருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை ,கதைக்கு ஏற்றவாறு பொருந்தித்தான் போகிறது. ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் விளையாடுகிறது.

இந்த கதைக்கு ஷங்கர் தேவையா என சிலர் கேட்க்கிறார்கள்.. இளைஞர்கள் மனசுல பதியுற மாதிரி சொல்றதுக்கு ஷங்கர் கண்டிப்பா தேவைதான்.

நீண்ட நாட்களாக அடிதடி , பன்ச் டயலாக்கில் மட்டுமே பார்த்து பழகிய விஜய்யை , அமைதியான நடிப்பில் ,பார்க்க இயல்பாய் இருக்கிறது.

நண்பன் _ நச்சுன்னு இருக்கு.

Saturday, January 14, 2012

எங்கே போனது ?


எங்கே போனது
உன் பொழிவான முகம் ?

உன் துறுதுறு
கேலிப்பேச்ச்சும் ,
கிண்டலுடன் வரும்
வசிய வார்த்தைகளும்
எங்கே போனது ?

அனைவரையும் கவர
உபயோகப்படுத்தும் ஸ்டைல்களும்,
நல்ல விசயங்களை
தேடுகின்ற அக்கறையும்
எங்கே போனது ?

இவையனைத்தையும் விட ,
உன் வெள்ளைமனது
இன்று சிதிலமடைந்திருப்பதற்கு
காரணமென்ன ...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அட செல்ல மகளே .
டீச்சர் திட்டியதற்காகவா இத்தனை அலங்கோலம் ?


தெய்வதிருமகள் !! புதிய கோணம் !!



ஒரு திரைப்படத்தின்  கதையை  எங்கிருந்து உருவினாலும் ,,அதை திரைக்கதையாக செதுக்கி ,விறுவிறுப்பு குறையாமல் எடுப்பது என்பது ,,சாதாரண விசயமல்ல !! அந்த வகையில் ,,வேற்று மொழி படத்தின் மையக்கருவை  மட்டும் உருவி ,இன்ன பிற விசயங்களை சேர்த்து ,,ஒரு அழகான காவியமாக கொடுக்கப்பட்டதுதான் தெய்வத்திருமகள் திரைப்படம் !

படத்தின் கதை அனைவரும் அறிந்ததே ,ஐந்து வயது மகளை ,,சிறிதளவில் மன வளர்ச்சி குன்றிய  தந்தை எவ்வாறு பராமரிக்க முடியும் ? என்பதே கதையின் மையக்கரு ! இந்த கதையை ,,தமிழுக்கு ஏற்றாற்போல் சிறப்பாக அனுபவம் இல்லாமல் செதுக்க முடியாது ! நிறைய தமிழ்ப்படங்கள் வேற்றுமொழி படக் கதையை உருவி எடுத்தும் கூட ,,வந்த சுவடே தெரியாமல் போயிருக்கிறது ! இன்றைய சூழலில் ,,அழுகை நிறைந்த காட்சிகளை  எடுத்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள் .அதிலும் புதுவித பாணியை கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஜய் !

குழந்தைப் படம் என்று பெரிவர்கள் நினைத்துவிடாதபடி ,திரைக்கதை அமைத்திருக்கிறார் .உதாரனத்திற்கு,அந்த நீதிமன்ற க்ளைமாக்ஸ் காட்சியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு .. இரு மூத்த வக்கீல்களின் சின்ன  பாத்திரங்கள் கூட ரசிகர்களை கவர்ந்து இழுத்தன ! அவர்கள் பேசும் அடாடாட ,,அபபபபாபா என்ற வாக்கியங்களை கேட்கும்போது ,அந்த சோகமான கதைச்சூலளையும் கலகலப்பாக ஆக்கிய திறமை விஜய்க்கே சாரும் !

ஜி .வி பிரகாசின் ,,பின்னணி இசை ,,இளையராஜாவின் பின்னணி இசை பாணியில் சிறப்பாக இருந்தது ,பாடல்கள் எல்லாமே ,,எங்கிருந்தோ உருவிய பாடல்கள் என்றும் சொல்லபட்டால் கூட ,,கதையின் போக்குக்கு ஏற்ற விதமாய் அமைந்து இருந்தது ! முக்கியமாக ஆரிரோ ,,இது தந்தையின் தாலாட்டு ,,மிகவும் நேர்த்தியான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட பாடல் .

நடிகர்களை பற்றி சொல்வதென்றால் ,,விக்ரம் ,,நாசர் ,,சந்தானம் ,பாஸ்கர் என்று அத்தனை பேருமே தனக்குரிய பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள் !நடிகைகள் அனுஸ்காவுக்கு முக்கிய கதாபாத்திரமாய் ஜொலித்திருக்கிறார் ,,அமலா பாலின் நடிப்பு போதுமானதாய் இருந்தது !

மொத்தத்தில் தெய்வதிருமகளை எடுத்த தெய்வதிருமகன் விஜய்க்கு வாழ்த்துக்கள் !! இந்த வருடத்திற்க்கான சில ,பல விருதுகளை வெல்லும் என்று நிச்சயமாக சொல்லலாம் !

பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !


இந்த நன்னாளில் அனைத்து சுப செல்வங்களும் பெற்று ,அனைவரும் சிறப்பாய் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம் !

Friday, January 13, 2012

மார்கழி மாத பஜன் கொலவெறி ! (வீடியோ இணைப்பு )



கடந்த இரு மாதங்களாக இளைஞர் பட்டாளமே கொலவெறி பாடலை ,தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

யுடியூபில் தனுஷின் கொலவெறி ஹிட்டாக , அதை தொடர்ந்து ,பலரும் ,அந்த பாடலை ரீமேக்கினார்கள்.
அந்த பாடல்களும் ,பல பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ,என் உள்ளூர் நண்பர்கள் .
மார்கழி மாத பஜனை பாடும் குழுவினரை செல்போனில் படம் பிடித்து ,எடிட் செய்து ,கொலவெறி பாடல் மூலம் நையாண்டி செய்திருக்கிறார்கள்.

நீங்களும்தான் பாருங்களேன்.





Saturday, January 7, 2012

WARRIOR (2011) சினிமா விமர்சனம்


சிறு குழந்தைகளுக்கு உணவூட்ட நமக்கு எவ்வளவு பொறுமையும் ,நிதானமும் தேவையோ ,அதுபோல ஒரு சிறப்பான திரைப்படத்தை ,அதன் அடிப்படை அழகியலோடு எடுக்கவும் திறமை தேவை. அந்த திறமை கெவின் ஒ கார்னரிடம் இருக்கிறது.


கான்லனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பிரென்டன், இளைய மகன் டாமி. இந்த இருவருக்கும் அப்பாவின் கெட்ட பழக்க வழக்கங்கள் பிடிக்காததால் இருவருக்கும் அப்பாவை பிடிக்காமல் போகிறது. இதன் தொடர்ச்சியாக மூத்த மகன் பிரென்ட்டனுக்கும் இளைய மகன் டாமிக்கும் கூட மனக்கசப்பு ஏற்பட்டு பிரென்டன் தனியாக பிரிந்துவிடுகிறார்.

இளைய மகன் டாமி ,ஒரு குத்துச்சண்டை போட்டியில் ,முக்கியமான வீரரை வீழ்த்தி, யூடியுப் மூலம் ஓவர் நைட்டில் புகழடைகிறார்.இதனிடையே கான்லன் , தான் திருந்திவிட்டதாக டாமியிடம் சொல்கிறார். இதை நம்பமறுக்கும் டாமி அப்பாவை எடுத்தெறிந்து பேசுகிறார்.

இந்த பக்கம் ,மூத்த மகன் பிரென்டன் , கல்யாணம் முடித்து ,ஒரு பள்ளியில் பிசிக்ஸ் வாத்தியாராக வேலை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் கடன் அவரை நெருக்க ,சிறிய அளவிலான குத்துச்சண்டையில் போட்டியிட்டு பணத்தை சேமிக்கிறார். இதை அனுமதிக்காத பள்ளி நிர்வாக விதிமுறை ,பிரன்டனை சஸ்பென்ட் செய்கிறது. இதனால் மாணவர்களும் ,ப்ரின்சிபாலும் பிரென்டனை நினைத்து வருத்தமடைகிறார்கள். மனம் தளராத பிரென்டன் அவனுடைய நண்பன் நடத்தும் குத்துச்சண்டை பயிற்சியில் சேர்ந்து இளம் வீரர்களுக்கு பயிற்ச்சியளிக்கிறார். பயிற்ச்சியின்போது முக்கிய வீரர் காயமடைய ,பிரென்டன் வலிய சென்று தான் போட்டியில் கலந்துகொள்கிறேன் என நண்பனிடம் சொல்லி சம்மதம் வாங்குகிறான்,


இதனிடையே ஸ்பார்ட்டா குத்த்துச்சண்டை போட்டி தொடங்குகிறது. டாமி முதல் ரவுன்டிலேயே எதிரியை அடித்து வீழ்த்துகிறார். பிரென்டனும் தட்டுத்தடுமாறி லீக் சுற்றில் படிப்படியாக முன்னேறுகிறார். தன் மகன்கள் வெற்றி பெறுவதை பார்த்து சந்தோஷப்படும் கான்லன் ,இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். எதுவும் பயனளிக்கவில்லை. 

அரையிறுதியில் முக்கிய வீரர்களை பிரெண்டனும் ,டாமியும் தனித்தனியே வீழ்த்தி ,இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறார்கள். அந்த உணர்வுப்பூர்வமான இறுதிப் போட்டியில் வென்றது யார் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். 


இயக்குனர் சிறு சிறு சம்பவங்களை கூட நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். உதாரணத்திற்கு பிரன்டன் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்போது ,அவனுடைய மனைவி போட்டியை பார்க்காமல் வழக்கம்போல் வீட்டு வேலைகள் செய்துகொண்டிருப்பாள். வெற்றி என்ற செய்தி வரும்போதுதான் அவளின் முகத்தில் புன்னகை பூக்கும்.

படத்தில் எனக்குப் பிடித்த வசனம் ஒன்றை சொல்கிறேன், பிரன்டனின் கோச் நண்பர் ,பிரன்டனை பார்த்து சொல்கிறார், "நீ இன்னிக்கு ஜெயிச்சாதான் ,உனக்கு வீடு கிடைக்கும் ,ஏன்னா இப்போ வரைக்கும் உனக்கு வீடு இல்லை "

அதே போல் ,பிரன்டனின் பள்ளி  மாணவர்களும் ,பிரின்ஸிபால் உட்பட அனைவரும் பிரன்டனின் ஒவ்வொரு வெற்றியைப் பார்த்து ஆனந்தப்படுவார்கள் ,நானும்தான் !

என் பார்வையில் WARRIOR ,நல்ல அழகியல் திரைப்படம்தான் .

Tuesday, January 3, 2012

THE DEBT (2011) சினிமா விமர்சனம்

எடுத்த எடுப்பில் திரைக்கதையில் வேகத்தை கொண்டு வருவது என்பது சிரமமான காரியம் .. இந்த திரைப்படத்தில் அந்த சிரமமான காரியத்தை சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்,






 இஸ்ரேலிய உளவாளிகள் பற்றிய கதை..


முன்னாள் ஏஜென்ட்ட்டான ரேச்சலின் மகள் ,தன் அம்மாவின் வீர தீர சாகசத்தை புத்தகமாக எழுதி வெளியிடுகிறார். வெளியிடும் அதே நேரத்தில் ரேச்சலின் முன்னாள் கணவன் ஸ்டீபனை பார்த்துவிட்டு ,ஒருவர் வாகனத்தில் மோதி மரணமடைகிறார்.

கதை 1965க்கு பின்னோக்கி பயணிக்கிறது, மொசாத் ஏஜென்ட் ரேச்சல் ,ஜெர்மனியில் இறங்குகிறார்.அங்கு ஏற்கனவே ஏஜென்ட்டாக உள்ள டேவிட் மற்றும் ஸ்டீபனை சந்திக்கிறாள். மூன்று பெரும் சேர்ந்து கடத்தல் திட்டத்திற்கு தயாராகிறார்கள்.

ஜெர்மானிய போரின்போது ,யூதர்களை கொன்று குவித்த டாக்டர் ஒருவரைத்தான் இந்த மூவரும் இஸ்ரேலுக்கு கடத்தி அரசாங்கித்திடம் ஒப்படைப்பாதாக திட்டம் .அதன்படியே ரேச்சல் ,கர்ப்ப டெஸ்ட் எடுக்க இரண்டு முறை சென்று ,டாக்டரின் நடவடிக்கையை கண்கானிக்கிறாள். மூன்றாவது முறை ,டாக்டரை மயக்க ஊசி போட்டு ,சாமர்த்தியமாக கடத்துகிறார்கள்.. இருந்தும் நாடு கடத்துவதற்காக டாக்டரை ட்ரெயினில் ஏற்ற போடும் திட்டம் சொதப்பலாகிறது.


வேறுவழியில்லாமல் ,டாக்டரை , ஏஜன்ட்கள் தங்கியிருந்த அறைக்கு கொண்டு செல்கிறார்கள் ..டாக்டரை உளவியல் ரீதியாக பைத்தியமாக்க முயற்சி செய்கிறார்கள் ..எதுவும் பயனளிக்கவில்லை.. இந்நிலையில் டேவிட் மற்றும் ஸ்டீபன் இருவருக்குமே ரேச்சலின் மீது காதல் வருகிறது. ரேச்சலுக்கு டேவிட்டை பிடிக்கிறது. டேவிட் சற்றுத் தயங்கும் நேரத்தில் ஸ்டீபன் ரேச்சலுடன் உறவு கொள்கிறாள்.

சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் டாக்டர் ,ஒருநாள் டேவிட் ,ஸ்டீபன் இல்லாத போது, ரேச்சலை காயப்படுத்திவிட்டு தப்பிக்கிறார். இதனால் மூன்று பேரும் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். மனதை திடப்படுத்திக் கொண்டு ,ஸ்டீபன் ஒரு பொய்யை சொல்லிவிடலாம் என தீர்மானிக்கிறார்.இருவரும் சம்மதிக்கிறார்கள். அந்த பொய் என்னவென்றால் ? தப்பியோட முயற்சித்த டாக்டரை ரேச்சல் சுட்டுக் கொன்றுவிட்டார் என்பதே .

அனைவரும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மூன்று பேரையும் பாராட்டுகிறார்கள்.இந்த போலியான பாராட்டு பிடிக்காத டேவிட் அங்கிருந்து காணாமல் போகிறான்.. டேவிட் எங்கு போனான் ?அந்த குற்றவாளி டாக்டர் என்னவானார் ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
நம் மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த திரைப்படம் ,நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் .2007ம் வருடம் இஸ்ரேலில் வெளிவந்த இந்த படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்து 2011 வருடம் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். என் பார்வையில் நல்ல சஸ்பென்ஸ் திரைப்படம் .


Monday, January 2, 2012

STRAW DOGS (2011) சினிமா விமர்சனம்


அன்றாடம் நாம் கேள்விப்படும் பிரச்சினைதான் ,இந்த திரைப்படத்தின் கதை. ஒருவித சஸ்பென்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் மூலக் கதை ,நாவலில் இருந்து கையாளப் பட்டிருக்கிறது.
1971ல் எடுத்த திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்திருக்கிறார்கள் .

கதை இதுதான் .
கணவன் ,மனைவி சந்தோஷமாக வாழ்கிறார்கள். மனைவியின் பூர்விக வீட்டிற்கு சென்று கொஞ்ச காலம் தங்கியிருக்க ஆசைப்படுகிறார்கள். அந்த வீட்டின் ஒரு பகுதியை  சீரமைக்க ,அங்குள்ள ஆட்களை  வேலைக்கு அமர்த்துகிறார்கள், வேலைக்கு அமர்த்திய ஆட்களில் ஒருவன் மனைவியின் முன்னாள் காதலன் .
ஆரம்பித்திலிருந்தே ,இந்த முன்னாள் காதலனும் ,அவனுடைய ஆட்களும் ,ஹீரோவின் மனைவி மீது ஒருவித கள்ளப் பார்வையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒருநாள் இந்த வேலையாட்கள் ,ஹீரோவை தாஜா செய்து ,மான் வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அழைத்துச் சென்ற இடத்தில் ,ஹீரோவை தனியாக விட்டுவிட்டு ,காணாமல் போகிறார்கள்.இந்த நேரத்தில் ,முன்னாள் காதலன்,ஹீரோவின் மனைவியை வலுக்கட்டாயமாக அடைகிறான், அடைந்த அடுத்த நிமிடத்தில் ,முன்னாள் காதலனின் கூட்டாளியும் ,ஹீரோவின் மனைவியை வன்புணர்ச்சி செய்கிறான். 

வேட்டையாடிவிட்டு வீடு திரும்பிய ஹீரோவிடம் ,ஹீரோயின் எதுவும் சொல்லாமல் ,நீ ஒரு கோழை என சொல்கிறாள்.
ஹீரோவும் ,இந்த வேலையாட்கள் வந்ததிலிருந்தே பிரச்சினை என எண்ணி ,அவர்களுக்கு அதிக தொகை கொடுத்து ,வேலையை விட்டு அனுப்புகிறான். 

இந்த நேரத்தில் ரக்பி கோச்சின் மகளை ,நீண்ட நாளாக அவளை பின்தொடர்ந்தவன் எதிர்பாராதவிதமாக அவளை கொன்றுவிடுகிறான் .இது தெறியாமல் ஹீரோ ,அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார், இதை தெரிந்துகொண்ட அந்த முன்னாள் காதலன் ,ரக்பி கோச்சிடம் சொல்கிறார். ஆத்திரப்பட ரக்பி கோச் ஹீரோவின் வீட்டை உடைக்க சொல்கிறார்.அதிலிருந்து ஹீரோவும்,ஹீரோயினும்  எப்படி தப்பித்தார்கள் என்பதை பதட்டம் நிறைந்த கிளைமாக்ஸாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் உளவியல் ரீதியாக ,அனைவருக்கும் ஒரு சிறு அதிர்வை உண்டாக்கும். "முடிந்தால் பாருங்கள்".

Sunday, January 1, 2012

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
                                                                     
                                                                                 அன்புடன் .உடன்பிறப்பே :-)

பிரபலமான பதிவுகள்