Loading

Monday, May 7, 2012

வழக்கு எண் 18/9 (சினிமா விமர்சனம் )


ஏழ்மையில் நிலையில் இருக்கும் ஒருவன், சந்திக்கும் காதலும் ,அதன் எதிர்பாராத தாக்கமும்தான் கதையின் மையக்கரு .
செய்தித் தாள்களில் ஒருவரி செய்திகளில் அடிபடும் சம்பவங்களையே திரைப்படமாக எடுத்து வரும் பாலாஜிசக்திவேல்
இந்த வழக்கு எண் திரைப்படத்தையும் ,செய்தியின் அடிப்படை கருவை மட்டும் எடுத்து மெருகேற்றி ,அழகாக தந்திருக்கிறார் .



முதல் காட்சியிலேயே ,ஒரு பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியதால் ,அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் .
அதை காவல்துறை விசாரிக்கிறது ..அதிலிருந்து கதை பயணிக்கிறது ..


கதையின் முதல் பகுதி :


கதையின் நாயகனுக்கு,வறுமையால் சிறு வயதிலையே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ,வடமாநிலத்தில் கடும்
வேலை செய்யும் நேரத்தில் ,நாயகனின் அப்பா ,அம்மா இறக்கிறார்கள் .அனாதையாக ஆகும் நாயகன் ,சென்னைக்கு வருகிறார் .
அங்கு பாலியல் தொழில் செய்யும் ,ரோசி என்ற அக்காவின் மூலம்,பிளாட்பார உணவகத்தில் வேலைக்கு சேர்கிறான் .
இந்த நேரத்தில் ஜோதி என்ற பெண்ணை பார்க்கிறான் .ஆரம்பத்தில் முட்டல்,மோதலுடன் சென்று ,ஒரு கட்டத்தில்
ஜோதி மீது காதலில் விழுகிறான் ,ஆனால் ஜோதிக்கு இவனை கண்டால் ஆவதில்லை ...இந்த நேரத்தில் போலிஸ் அவனை
ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறது


கதையின் இரண்டாம் பகுதி :

ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் ,ஆர்த்தி என்ற பிளஸ்2 மாணவி இருக்கிறாள் ,அவளை பணக்கார வீட்டுப் பையன்
டாவடிக்கிறான்..முதலில் பாடத்தில்  சந்தேகம் கேட்பது போல உள்ளே வந்து ,ஆர்த்தியுடன் அறிமுகமாகி
கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அந்தரங்களை படமெடுத்து ,நண்பர்களிடம் காட்டி வருகிறான் ..இதை ஒருகட்டத்தில் அறிந்துகொள்கிற
ஆர்த்தி ,அவனை விட்டு விலகுகிறாள் ..
காரியம் கெட்டுவிட்டதேயென ஆத்திரப்பட்டு ,அவளின் வீட்டிற்கு சென்று ஆசிடை ஊற்றுகிறான் .ஆனால் ,வேலை பார்க்கும்
ஜோதி மீது ஆசிட் பட்டு ,ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கிறார்கள் ..

ஆர்த்தி காவல்நிலையத்தில் உண்மையை சொல்லிவிடுகிறாள் ..பணக்காரப் பையனின் அம்மா ,மினிஸ்டரின்
கீப்பாக இருப்பதால் ,கேஸை ஜோடித்து திசை திருப்புகிறார்கள் ,காவல் துறையினர் ..இறுதியில் என்ன நடந்தது
என்பதுதான் வழக்கு எண் திரைப்படத்தின் திரைக்கதை சுருக்கம் .

காட்சிப்படுத்துதலில் பாலாஜி சக்திவேல் ,உலகப்பட யுக்தியை கையாண்டிருக்கிறார் .கேமெரா கோணமாகட்டும்,
ஒரு காட்சியின் பினிஷிங் ஆகட்டும் ,எல்லாமே நிறுத்தி நிதானமாக செய்யப்பட்டவை என்பது தெளிவாக தெரிகிறது .
தன் முந்தைய படமான கல்லூரி போல் ,சொதப்பலாக ஆகிவிடக்கூடாது என்ற மெனக்கெடல் தெரிகிறது ..
எல்லாமே புதுமுகங்கள் என்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ் .புதுமுகங்களை வைத்து படமெடுப்பது என்பது
கத்திமுனையில் நிற்பது போன்று ..அதை திறம்பட செய்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு சிறப்பு பாராட்டுக்கள் ..நிச்சயம்
விருது கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கலாம் ..





நாயகன் ,சாப்பிட வழியில்லாமல் மயங்கிக் கிடக்கும்போது ரோசி என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்மணி ,இட்லி
வாங்கிக் கொடுத்து ,வேலைக்கு சேர்த்துவிடும் ,அந்த காட்சியில் அந்த பெண்மணி போன திசையையே பார்க்கும் அந்தக்
காட்சி மிகச்சிறப்பு ..
அது போல ,நாயகனின் கூடவே வேலை செய்யும் பொடிப்பையன் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது
பாலாஜிசக்திவேலின் இந்த மாதிரி புதுமுகங்களை படத்தில் அறிமுகப்படுத்தும் போக்கு நிச்சயம் பாராட்டதக்கது .
இசை என்று பெரிதாக இந்த படத்தில் தேவையில்லை என்பதால் ,அடக்கியே வாசிக்கப்பட்டிருக்கிறது .
காவல்துறை வழக்கை ஜோடிக்க செய்யும் கேன்வாஸ் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது .
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதையின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது ..
கதையை மேலும் நீட்டிக்காமல் ரத்தினச் சுருக்கமாக படத்தை முடித்த விதமும் பாராட்டுக்குரியது .
நடைமுறையில் ஒரு பெண் துணிந்து செய்வாளா என்ற கேள்வியை கூட கேட்கமுடியாதபடி
செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ..

வழக்கு எண் 18/9- மக்கள் மன்றத்தில் ஜெயித்துவிடுகிறது .




No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்