Loading

Monday, July 23, 2012

விலைவாசி !


ஆடிக்காத்துல தலைவிரிக்கோலமாத் திரியுறோமேன்னு நினைச்சு முடியை வெட்டலாமுன்னு போனா ,
100 ரூபா கேக்குறான் .போன தடவை வெட்டுனப்ப 80ரூபாதான் கொடுத்தேன்னா ,அது போன
மாசம்;இது இந்த மாசம் அப்படீங்கிறான்.

என்னய்யா இப்படி ஏத்திகிட்டே போற அப்படின்னு அதட்டிக் கேட்டா,என் கடை,வீடு எல்லாத்தோட வாடகையை
ஏத்திகிட்டே போறானே,மொதல்ல அவனை நிறுத்தச் சொல்லு,பிறகு நான் நிறுத்துறேன்னு
வசனம் பேசுறான் .
அப்படி என்னய்யா வாடகையை ஏத்திட்டான்னு கேட்டேன்.100சதுர அடி கடைக்கு 5000-ன்னு சொல்றான்.போன
மாசம் வரைக்கும் 3500ரூபாய்தான் கொடுத்தானாம்.12 வருஷத்துக்கு முன்னாடி காம்ப்ளெக்ஸ்(மூணே கடைதான்)
கட்டினப்ப முதல்முதலா 300 ரூபாய் வாடகை கொடுத்து பூஜைபோட்டு கடையை வச்சேன் சார்.ஓனர் தாத்தா அப்பல்லாம்
நல்லவரா இருந்தாரு.நேத்தைக்கு திடீர்னு வந்தாரு.இந்த மாசத்திலேயிருந்து 5000 வாடகை கொடுத்துடுன்னாரு.நான்
பதில் சொல்றதுக்கு இஷ்டமில்லாட்டி காலி பண்ணிக்கன்னுட்டார்.

கடைக்காரன் சொன்னதைக் கேட்டதும்,உடனே ஓனர் தாத்தாவைப் பார்த்து,உனக்கு ஏன்யா இந்த பேராசை?
உன்னாலதானே எனக்கு முடிவெட்ட 20ரூபாய்அதிகமாயிடுச்சுனு நாக்கைப் பிடுங்குற மாதிரி பேசிடுவோமுன்னு
நினைச்சேன்.கடையின் பின்னால் இருந்த அவருடைய  வீட்டை எட்டிப் பார்த்தேன்.இந்தியன் தாத்தா மாதிரி சேரில்
உக்காந்து பேப்பர் படிச்சிகிட்டு இருந்தார்.அவருக்கு ஒரு வணக்கம் வச்சிட்டு,என்னோட பேரு ஏகாம்பரம்னு
என்னை அறிமுகப்படுத்திகிட்டு கடை ஏதாவது வாடைகைக்கு இருக்கான்னு கேட்டேன்.

"கடையெல்லாம் இல்லையப்பா!இந்த காலத்துல எவன் கடையை காலி பண்றான்?மூணு பேரும் 12வருஷமா இருக்கானுங்க.
காலி பண்ணா வாடகையை 7000ன்னு ஏத்தலாம்னு பாக்கேன்.பழைய ஆளுங்களாச்சேன்னு பரிதாபப்பட்டு 5000த்துக்கு
விட்டுருக்கேன்" என்றார்.

நைஸாகப் பேசினப்ப ,அவர் முழுக்கதையும் வெளியே வந்துச்சு.வேலை பார்க்கும்போது வாங்கிப்போட்ட இடத்தில்
ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்டில் கடையும் வீடும் கட்டினாராம் தாத்தா .பென்ஷன் இல்லாத உத்தியோகம்.தாத்தா
பாட்டி இருவருக்கும் மருத்துவச் செலவு 4000-5000-ன்னு ஆகிறதாம் .பத்து வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த மூன்று
கடை அட்வான்சும் சேர்த்து 3000ரூபாய் எஃப்டியில் இருக்காம் .

தாத்தா,பாட்டி ரெண்டு பேருக்கும் ஒரு டீசன்ட் லிவிங்கிற்கு 15000 வேணுமாம்.இன்னைக்கு ஒரு கடைக்கு 7000
வாடைகைங்கிற கணக்குல பத்து மாச அட்வான்ஸ் வாங்கினா 2,10,000 ரூபாய் கிடைக்கும் என்று கணக்கு போட்டார்,ஆனா
ரொம்ப பெரிய மனசு பண்ணி ,5000 ரூபாய்தான் வாடகை வாங்குறார்.அவரு என்ன பண்ணுவாரு,மருத்துவச் செலவு ,,டிவி
மொபைல்,சாப்பாடு ,துணிமணியோட விலை ஏறிகிட்டே இருக்கே!இதுக்கு அவரு அதிகமாச் செலவு செய்ய வேண்டியிருக்கே!
ஏன்தான் இந்த விலைவாசி ஏறுது என்ற கேள்வி மண்டையைப் பிராண்ட ஆரம்பித்தது.மனுஷனுக்கு தேவையான
உணவுப்பொருள் விலை ஏறிகிட்டே போகுது.விலை ஏறுனா அதை தயாரிக்கிறவனுக்கு நிறைய லாபம் கிடைக்கனுமில்லையா?
ஆனா காய்கறி ,அரசி ,பருப்பை உற்பத்தி செய்ற விவசாயி ஏழையாத்தான் இருக்குறான் .விவசாயிகிட்ட குறைஞ்ச விலையில
வாங்கி ,நம்மகிட்ட அதிக விலைக்கு வித்து கொழுத்த லாபம் சம்பாதிச்சுடுறாங்க சில பேரு.

உணவுப்பொருள்தான் இப்படி பிரச்சினைன்னா,முடிவெட்டுறது,பென்சிலு,பேனா,பேப்பருன்னு எல்லாமே விலை ஏறிகிட்டே போகுது.
இப்படி எல்லா பொருளோட விலை,ஏத்தத்துக்கும் காரணம் நிலத்தோட விலை ஏறுனதுதான்னு தோணுது.முடி வெட்டுற கடைக்கும்
இடம் வேணும்.அது ஏற ஏற எல்லாமே ஏறுதுங்கிறது தெளிவா தெரியுது.

சரி எடத்தோட விலை ஏன் ஏறுது ?பொருளாதாரம் வளருதுங்குறோம்.எல்லாரும் வேலைக்குப் போறோம்.எல்லாரும்
சம்பாதிச்சு ஒரு இடத்தை வாங்கிப் போட்டறனுமுன்னு இடத்தை துரத்தி துரத்தி வாங்கி விலையை ஏத்துறோம்.
வேலைக்குப் போற நாமளே விலைவாசி ஏறுனா கூலியை கூட்டிக் கேக்குறோமே!முதலீடு போட்டுத் தொழில்
செய்ற பண்றவன் என்ன நமக்கு சளைச்சவனா?நாம ஒரு ரூபா கேட்டா அவன் பத்து ரூபா விலையை ஏத்திக்கிறான்.
நாம விலைவாசி ஏறுதுன்னு புலம்புறோம்.கடனை வாங்கி இடத்தை வாங்குறோம்.இடத்து விலை ஏறுது.அதனால வாடகை
ஏறுது.தொழில் பண்ண முதலீடு அதிகமாப் போடவேண்டியிருக்கு .அதனால விலைவாசி ஏறுது.அதனால பணவீக்கம் அதிகமாகுது.
பணவீக்கம் அதிகமானதாலே வட்டி ஏறுது.வட்டி ஏறுனா நாம வாங்குன வீட்டுக் கடனோட தவணை ஏறுது.நமக்கு கழுத்து இறுகுது.

நம்ம கழுத்துல இந்த சுருக்கைப் போட்டது யாருங்க?ஒருவேளை நாமளேதானோ என்னவோ !
நிலத்தோட ஏற்றத்தை ஏதாவது பண்ணலைனா ,சராசரியா 65வருஷத்துல மனுஷனை ஜெயிக்கிற மண்ணு,ரொம்ப சீக்கிரமாவே
ஜெயிச்சுடுமோன்னு பயமா இருக்குங்க.
                                                                    நன்றி நாணயம் விகடன்!

1 comment:

  1. ஷப்பா எவ்வளவு மேட்டர்........
    ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறேன் நலமா இருக்கிறீங்க தானே..?

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்