Loading

Sunday, September 24, 2017

அம்மாவும் அப்பிரண்டீஸ்களும் !!!

திண்டுக்கல் சீனிவாசன் :
அம்மா இட்லி சாப்பிட்டாங்க

சி.ஆர் சரஸ்வதி :அம்மா பந்து விளையாடினாங்க

கவர்னர் :அம்மா கட்டைவிரல் காட்டினாங்க

வளர்மதி :அம்மா ஆப்பமும்,பாயாவும்
கேட்டு சாப்பிட்டாங்க

வைகோ :ரிச்சர்ட் பீலேட்ட விசிட்டிங் கார்டு வாங்கினேன் ,அம்மா  அருமையா இருக்காங்கனு சொன்னார்

பொன்னையன் :அம்மா வாக்கிங் போறாங்க

சரத்குமார் :அம்மா ஜாகிங் போறாங்க.

அஜித் பேன்ஸ் :அம்மா அஜித் படம் பார்த்தாங்க

விஜய் பேன்ஸ் :அம்மா பைரவா பாட்டு கேட்டாங்க

ஜெயா டிவி :அம்மா தேன் கின்னம் நிகழ்ச்சி பார்த்தாங்க

நாஞ்சில் சம்பத் : பீலேவுடன் சேர்ந்து பாலே டான்ஸ் ஆடுமளவுக்கு அம்மா தேறியுள்ளார் .

பிரதாப் ரெட்டி :
அம்மா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார்

மக்கள் :  ஐய்யயே பைத்தியங்க


Thursday, August 31, 2017

திரைப்படமும் ,பிள்ளை பெறுதலும் !!!

ஒரு திரைப்படம்  என்பது,
பத்து மாதம் கஷ்டப்பட்டு பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு ஒப்பானது என ,இந்த வாரம் முழுவதும்
சொல்லி வைத்தாற் போல் அத்தனை பேரும் நமக்கு டியூஷன் எடுத்ததால்,
மனம் திருந்தி,மீண்டும் லிப்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற காவியத்தை பார்த்தேன்.

முதல் முறை இந்த படத்தை பார்த்தபோது,
இந்த படத்துல நடிச்சவனை எல்லாம் பெத்ததுக்கு பதிலா,செக்கண்ட் ஷோ படத்துக்கே போயிருக்கலாமேடா என தோன்றியது.
ஆனால் இப்போது அப்படி இல்லை,
அந்த சமயத்திலும்,
சில அறுவைப் படங்கள்.வந்து தொலைத்ததால் நேர்ந்த விபத்தென மனதை தேற்றிக்கொண்டேன்.

மூன்று விதமான கெட்டப்புகளில்,
சிம்பு கஷ்டப்பட்டு ,தன்னை வறுத்திக்கொண்டு உடம்பை வளர்த்துள்ளார்.இந்த படத்திற்க்காக
செனைப் பன்னி போல உடம்பை மாற்றிக்கொள்ள நாள்.முழுவதும் பீர் அடித்து உழைத்திருக்கிறார் போல.
அவ்வளவு அருமையான தோற்றம்.

இந்த படத்தின் திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமானது.பிரபல இயக்குனர்
க்ரிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமெண்டொ படத்தின் திரைக்கதையை எல்லாம் மிஞ்சிய திரைக்கதை இது.
என்ன நடக்கிறதென நமக்கு சாகும் வரை கூட புரியாது என்பதுதான் ,இந்த குழந்தையின்(படத்தின்)மிகப்பெரிய டியுப்லைட் ச்சி ஹைலைட்.

கனவு உன்னி ச்சி கனவுக்கன்னி ஸ்ரேயா,தமன்னா போன்றவர்களுக்கு தலையெழுத்து நன்றாக இருக்கிறது போல.அதனால் தான் இந்த மகா காவியத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதை வெட்டியாக  கெட்டியாக பிடித்து சாதித்திருக்கிறார்கள்.

படத்தின் இடையில் ஆஸ்கார் நடிகர் ஜி.வி பிரகாஷ் வேறு கவுரவ? தோற்றம் கொடுத்து நம்மை இ(து)ன்பப்படுத்தி வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த திரைப்படம்,
நம்மை காப்பாற்ற வந்த எடப்பாடி அரசை போல செம்மையாக இருக்கிறது.
கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
இந்த படத்தில் நடித்த உச்சா நடிகர்,ச்சி உச்ச நடிகர் சிம்பு அவர்கள்,
விவேகம் படத்தை பாராட்டி
பேசியிருப்பதை அறிந்தேன்.
அந்த படத்தையும் மீண்டும் பார்த்து சாக
(சம் செய்ய) ஆவலாக இருக்கிறது.

Saturday, August 12, 2017

குருவியார் டார்ச்சர்கள் !!

தினத்தந்தியில் ஞாயிறு தோறும்,
குருவியார் கேள்வி பதில் தொடரை பிரசுரித்து வருகிறார்கள்.
அதில் கேட்கப்படும் கேள்விகள்,
மிகவும் வித்தியாசமானது.கடும் சோம்பேறி கூட
இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள் .
உதாரணத்திற்கு,

திரிசா காலையில் குடிப்பது காபியா?
டீயா ?

நயன் தாரா என் கனவில் வருவாரா மாட்டாரா ?

ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார் ?

இப்படிப்பட்ட மொன்னை கேள்விக்கு,
குருவியாரும் பக்கத்தை நிரப்பும் விதமாம மொக்கையாக பதிலளித்திருக்கும்.
இதை தெரியாத்தனமாக ,படிக்க ஆரம்பித்தால் கூட மண்டையில் சுர்ரென்று ஏறுமளவுக்கு பதில்கள் அமைந்திருக்கும்.

நான் தினத்தந்தியிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

ஞாயித்துக்கிழமை லீவு வேணும்னா எடுத்துக்கோங்கடா!இப்படி எதையாவது கிறுக்கி எங்களை கிறுக்காக்காதிங்கடா.

தமிழகத்தில் சர்வதேச உளவு அமைப்புகள் !

முந்தாநேத்து நம்முர்ல அமெரிக்க காரன் ஒருத்தனை பார்த்தேன்,
மும்மரமா பேப்பர்ல நோட்ஸ் எடுத்துட்டு இருந்தான்,
ஏதோ அட்ரஸ் எழுதுவான் போலனு
நினைச்சு மறந்துட்டேன்,.
நேத்திக்கு கொரியாகாரன் ஒருத்தனை பார்த்தேன்,அவனும் சுத்தி முத்தி பார்த்துட்டு,எதையோ நோட்ல எழுத ஆரம்பிச்சான்,இவனும் அட்ரஸ்தான் எழுதுவான் போலனு நினைச்சு விட்டுட்டேன்,
ஆனா ,இன்னிக்கு காலையில ,
ரோட்டை கிராஸ் பண்ணும்போது,
சீனாகாரன் ஒருத்தனை பார்த்தேன்.
அவனும் கைல நோட்டை வச்சுகிட்டு,
சின்சியரா எழுதிட்டு இருந்ததை பார்த்தப்போதான் எனக்கு திக்குனு ஆகிடுச்சு.

அடப்பாவிங்களா..
ஓவியா ஆர்மி ,ஓவியா ஆர்மினு கூவி,
ஏதோ ராணுவ புரட்சிதான் நடக்குது போலனு,
உலக நாட்டுல உள்ள அத்தனை பேரையும் ,இங்க வந்து உளவு பார்க்க வச்சிட்டீங்களேடா.

ஆங்கில ஆசான் !!!!

ஆங்கிலப் புலமைக்கு
ரெபிடெக்ஸ்,
ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி,
The Hindu ,
ஹாலிவுட் படங்களென
ஊரே போட்டிபோட்டுக்கண்டு கற்றதை
பார்த்து மிரண்டு போன எனக்கு
சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொடுத்த
பேராசான் அவர் .

ஆங்கில கான்வோ
புத்தகங்களை விட சிறந்த உரைநடையை
அசால்டாக பேசி பழகவைத்த
சிறந்த மொழிபெயர்ப்பாளர் அவர்.இப்போது கூட
இண்டெர்வீவ்க்கோ,
கருத்தியல் மாநாட்டுக்கோ,
அல்லது பெண்களிடம் பீட்டர் கடலை விடுவதற்கோ
எங்காவது ஒருவன்
அவரை ரெபரன்ஸ் செய்துகொண்டிருப்பான் .

What a beautiful ground ?
என்ன ஒரு அழகான மைதானம்

Yes ,you are right
ஆமா,நீங்க சொன்னது சரிதான்

What happening here ?
இங்க என்ன நடந்துட்டு இருக்கு ?

என ஆங்கில வாக்கியத்துக்கு
அடுத்த நொடியே
தமிழில் மொழிபெயர்த்து
கடைக்கோடி கிராமத்தானுக்கும்
கலிஃபோர்னியா ரக ஆங்கில
ஸ்லாங்கை ,அடித்து விளையாட  கற்றுத்தந்த ,பேராசான் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் (கமெண்ட் பாக்சில் காட்சியளிப்பார் )அவர்களுக்கு
என் கோட்டான கோட்டி தேங்ஸ்கள் .

Saturday, August 5, 2017

குழாயடி வீராங்கனைகள் !!

புதிதாக தண்ணீர் பிடிக்க வரும்
இளம் பெண்கள் ,
குழாயடி சண்டையை
பார்த்து மிரண்டு ஓடுவார்கள்,
இப்போதெல்லாம் அப்படி இல்லை, முதல்நாளே குழாயடி சண்டையில்,
தாமாகவே முன்வந்து அடி பின்னுகிறார்கள் .

எப்படி இந்த திடீர் புரூஸ்லி எபக்ட்
வந்ததென,ஏரியாவில் உள்ள முன்னாள் குழாயடி வீராங்கனைகள் ,குடத்தை சுற்றி குழு அமைத்து யோசிக்க ஆரம்பித்தார்கள்.

நம்மை போட்டு இப்படி பந்தாடுகிற பிஞ்சுகள் எதுவும் கராத்தே கிளாஸ் போகிறார்களா என பார்த்தால் ,அதுவுமில்லை.

சாயங்காலம் ஆனால்,தமிழ்  சீரியல்கள்
பார்த்து,வன்மம் வளர்க்கிறார்களா என பார்த்தால்,மழைக்கு கூட டிவி சீரியல்கள் பக்கம் யுவதிகள் ஒதுங்குவதில்லை.

புதிதாக முளைத்த "ஓவியா ஆர்மியில்"
உறுப்பினர்களா என பட்டியலில் தேடி பார்த்தும் பதில் கிடைக்கவில்லை.
பிறகு எங்குதான் குழாயடி சண்டைக்கு பயிற்சி எடுத்தார்கள் என ,ஏற்கனவே கலைந்து போயிருந்த தலையை,
மேலும் பிய்த்துக்கொண்டிருந்த நேரத்தில்தான்,

எக்ஸ்கியூஸ்மீ ,ஒன் குடம் வாட்டர் ப்ளீஸ்
என கேட்டுவந்த என்னை, முன்னாள் குழாயடி வீராங்கனைகள் ஏறிட்டு பார்த்தார்கள்.இவண் நமக்கு சரிப்பட்டு வருவான் என யோசித்தார்களோ என்னவோ,
ஒரு குடம் தண்ணி எடுக்க அனுமதி தர்றோம்,பதிலுக்கு நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்வியா என
பேக்கரி டீல் வைத்தார்கள்.
பயங்கர தன்ணீர் பஞ்ச சூழலில்
எனக்கும் அந்த டீல் ,கொஞ்சம் சுலபமாக தெரிந்ததால் தலையாட்டினேன்.

சாந்தமாக இருந்த நம் ஏரியா யுவதிகள் ,விஜயசாந்தித்தனமாக மாறிய கதையை என்னிடம்
புரியும்படி விளக்கினார்கள்.

ப்பூ..
இவ்வளவு தானா மேட்டரு,
இதுக்கு போயா 11பேர் கொண்ட குழு போட்டு யோசிச்சீங்க என மட்டம் தட்ட ஆரம்பித்ததில்,அவர்களின் கை முறுக்கேறியிருந்தது.

சரி..ஷோல்டரை இறக்குங்கக்கா..
பதிலை சொல்றேன்..
என சமாதானப்படுத்தி,
அவர்களின் கையில் என் மொபைலை கொடுத்தேன்.

அதில் "பேஸ்புக் " டைம்லைன் ஓடிக்கொண்டிருந்தது.

Sunday, July 30, 2017

விக்ரம் -வேதா !!!


போலிஸ் ரவுடிகள் செய்யும் கொலையை,
அதே போலிஸ்சை வைத்தே கொல்ல வைக்கும் சாமான்யனின் கதைதான் "விக்ரம் வேதா ".

படத்தோட கதையில எது சரி,எது தப்புங்கிறதை ,கதை சொல்லி ,கேள்வி கேட்டு புரிய வச்சிருக்காங்க .

உதாரணமா ..இந்த வருட.நிகழ்வுகளான,
மெரினா கலவரத்துல ,குடிசைக்கும் ஆட்டோக்கும், தீ வச்ச கான்ஸ்டபிளை நீங்க  அடிப்பீங்களா?
இல்லை அப்படி செய்ய சொன்ன ஐஜி யை ,அடிப்பீங்களானு உங்ககிட்ட கேள்வி கேட்டா,
உங்க பதில் என்னவா இருக்கும் ?

கதிராமங்களத்துல சொந்த வாழ்வாதரத்துக்கு போராடுற பெண்கள்  கிட்ட ,உன்னை பிராத்தலாக்கிடுவேன்னு ,
சொல்ற சாதரண ஏட்டையாவ விளாசுவீங்களா ?
இல்லை அப்படி சொல்லி,போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட தூண்டிய உயர் பதவி காக்கி ரவுடிகளை விளாசுவீங்களா ?

தர்மபுரி காதல் விவாகாரத்துல,
மொத்த காலனி யையும் எரிச்சு சாம்பலாக்கின தொண்டன்களை பொசுக்குவீங்களா ?இல்லை அப்படி செய்ய தூண்டின நயவஞ்சக  ? தலைவனை பொசுக்குவீங்களா ?



இந்த மாதிரி ,நம்மளை 
யோசிக்க வைக்க கூடிய வகைல 
நியாய அநியாயங்களை சரியான முறைல அலசிருக்காங்க.

காக்கி குண்டர்கள் செய்யும் திருட்டுத்தனங்கள், போலியான என்கவுண்டர் சித்தரிப்புகள்,அதனால் அடையும் பலன்களை ,உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள்.

பசிக்காக 1000ரூபா திருடுனவனை,
ஜெயில்லையே வச்சு கொல்லப்பட்ட செய்தியும்,
பேராசைக்காக 1000கோடி திருடுன ,
ஓநாய்ங்களுக்கு, இதே போலிஸ் பைரவாக்கள் சல்யூட் அடித்து வரவேற்குற நியுஸ்சையும் பார்த்துட்டு தான் இருக்கோம்.

விளை நிலமெல்லாம் ,விசமாகுதுனு பிட் நோட்டீஸ் கொடுத்தா ,குண்டாஸ்ல பதிவு செஞ்சு ஜெயில்ல அடைக்குற ,அதிகார குண்டர்களை ,
எந்த சட்டத்தின் மூலமா சிறையில அடைக்க முடியுது ?

முதலாளிகள் எல்லாம் அடிமைகளாக நடத்தப்படுவதையும்,
அடிமைகள் எல்லாம் முதலாளிகளாக  நடந்துகொள்வதையும் ஜனநாயகமென நம்ப வைக்கப்பட்டிருப்பதை ,இப்படம் 
காட்சிக் குறியீடுகளால் உணர்த்தியிருக்கிறது.

படத்தின் ஒரு காட்சியில் விக்கிரமாதித்தன்களுக்கு (அதிகாரிகள்)
வந்தா ரத்தம்,
வேதாளங்களுக்கு (உழைக்கும் மக்கள்)
வந்தா தக்காளி சட்னியா என 
கேட்கப்படும் வசனத்துக்கு,படத்தை பார்க்கும்  அடித்தட்டு ,நடுத்தர ,மக்களிடம் 
அப்ளாஸ் அள்ளுகிறது.

அதிகார போர்வையில்,
கொலைகார கும்பலாக திரியும்,
காக்கி ரவுடிகளை ,போட்டு தள்ளும் ஒவ்வொரு காட்சியையும் சாமான்யன் கைதட்டி வரவேற்கிறான்.

அது சாதாரண கை தட்டல் அல்ல, படத்திலாவது அதிகார கெட்டவர்கள்  சாகிறார்களே என்ற ஏக்கத்தின் தட்டல்  அது.

விக்ரம்-வேதா 
அதிகார அத்துமீறலும் -சாமான்யனின் போராட்டமும் !!!

Saturday, July 22, 2017

இது ஒரு ஜூ(போ)லி அரசு !!!

இந்த தமிழக அரசும்,பிக் பாஸ்
ஜூலி மாதிரிதான்.

ஆமா...
நான் காசு சம்பாதிக்கதான் பதவிக்கு வந்தேன்னு கூசாம சொல்வானுங்க.

ஏதோ நல்லது செய்ற மாதிரி நடிப்பானுங்க.டேய் நடிக்காதடானு ,யாராவது சொல்லிட்டா போதும்,
யாருங்க நடிக்குறது,எங்கம்மா ஹாஸ்பிட்டல கிடந்தாங்க தெரியுமா,
செத்துப்போய்ட்டாங்க தெரியுமானு சீன் போடுவானுங்க.

ஒருநாள் அக்கா ,அண்ணா,அருமை சகோதரர்னு பேசுவானுங்க,
அடுத்த நாளே,அவனே,இவணேனு ஒருமையில பேசுவானுங்க.

கேவலமான ஆட்சி நடத்துனாலும்,
நாங்க எவ்ளோ நல்லவங்க தெரியுமானு ,
செங்கோட்டையனை வச்சு தன்னைத் தானே நல்லவன் செர்ட்டிபிகேட் கொடுத்துக்குவானுங்க.

ஆகவே இந்த ஜூலி (போலி )அரசை ,
எலிமினேட் பண்ணனும்னா ,மறக்காம வோட் பண்ணுங்க !

விஜய்  டிவிக்கா பாஸ்னு எவனாச்சும்
கேட்டா,உங்களுக்குலாம் ஜூலி மாதிரி பொண்ணு(பையன்) தான்டா வாய்க்கும்னு சாபம் விட்டுக்குறேன்.

Wednesday, July 19, 2017

கமலும் -அமைச்சர்களின் ஊழலும் !!!

கமல் சொன்னது மாதிரி,
எல்லா துறையோட ஊழலை பத்தி , முன்னாடியே பல பேர்,ஆதாரங்களை திரட்டி பல நியூஸ் சானலுக்கு அனுப்பி பார்த்தோம்.
ஒரு கதையும் நடக்கலை,

உதாரணத்துக்கு மணல் கொள்ளையில ,
அமைச்சர்களோட பங்கு,மணல் முழுங்கி வைகுண்டராஜனோட பங்கு எவ்வளவுனு ,
தெளிவா நியுஸ்7 சானலுக்கு எடுத்து சொன்னோம்.
ராங் நம்பர் சார்னு சொல்லிட்டானுங்க.

அடுத்ததா,கல்லூரிக் கட்டணக் கொள்ளையில,
மெடிக்கல் சீட் சம்பந்தமா அமைச்சர்கள்,கல்லூரி அதிபர் அடிச்ச மகா கொள்ளையை பத்தி,
புதிய தலைமுறை சானலுக்கு எடுத்து சொன்னோம்.
இதை விட்ருங்க ,வேற எதுனா நியூஸ் இருக்கா  பாஸ்னு இளிச்சுட்டே வச்சிட்டானுங்க.

இந்த அம்பானி பய,
எப்படி எல்லா மாநில அமைச்சர்களுக்கும்,
தொழில் கொள்ளையடித்தல்,
சட்ட்பூர்வமா? நில அபகரித்தலுக்காக,
அட்வான்ஸ்சா அமவுண்டு கொடுத்து,
எப்படி கரெக்ட் பண்றாங்குறதை பத்தி,
நியுஸ் 18சானலுக்கு மெயில்லயும்,போன்லயும் சொன்னோம்.
கியா பையா,
ஊருக்கு புதுசானு கேக்குறானுங்க .

கடைசி முயற்சியா ,நடுநிலை சானலான ?
ராஜ் டிவிக்கு கூட அனுப்பி பார்த்தோம்,
அவன் போன ஜென்மத்துல ரிலீசான படகோட்டி படத்தையே இப்பதான் ,புத்தம் புதிய படம்னு ஓட்டிட்டு இருக்கான்.
நம்ம தகவலை ,தனுஷ் பையன் அரசியலுக்கு வரும்போதுதான் எடுத்து பார்ப்பான் போலிருக்கு.அதனால அந்த முயற்சியும் பலனில்லாம போச்சு.

அப்ப தந்தி டிவி பாஸ்னு நீங்க கேக்க வர்றது புரியுது,அவன் சானலுக்கு ஃபோன் போட்டு,ஹலோ சொன்னா கூட,
தாமரை மலர்ந்தே தீரும்னு,தமிழிசை டோன்ல
சொன்னதையே சொல்லிட்டு இருக்கான்.

சரி ..தப்பான அட்ரஸ்சுக்கு அனுப்பிட்டோம்னு,
ஊழல் தகவலை ,சானல் மாத்தி கூட அனுப்பி பார்த்தோம்.தொழில் போட்டியா இருந்தாலும்,பத்திரிக்கை அதர்மத்துல அன்ணன் தம்பியா பழகிருப்பானுங்க போல.
ஏதாவது ஆக்சிடண்ட் நியுஸ்,
அண்டார்ட்டிகா நியுஸ் எதுனாச்சும் கொண்டு வாயானு அசால்டா அனுப்பி விட்டானுங்க.

ஆனா இவனுங்கதான்,
கமல் அரசியலுக்கு வருவாரா,அமைச்சர்களின் ஊழலை வெளியிடுவாரானு ,காரசாரமா பெருமாள் மணியை வச்சு ,விவாதம் பண்ணிட்டு இருக்கானுங்க.

Saturday, July 15, 2017

உன் அண்ணன் என்னை காதலிக்கிறான்

என்னை நீண்ட நாளாக ஒருவன் டார்ச்சர் செய்கிறான்.நான் எங்கு சென்றாலும்,என்னை பின் தொடர்கிறான்.எப்போதும் என்னை சுற்றியே வருகிறான்.
அவன் வேறு யாருமல்ல,உன் அண்ணன் தான்.இதைக் கேட்டு ஆச்சர்யப்படாதே,
உன் அண்ணன் என்னை காதலிக்கிறான் என்கிற பேரதிர்ச்சியையும் கேட்டுவிட்டு ஆச்சர்யப்படு.

இந்த செய்தியை நீ நம்பாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை நம்பவைப்பதற்கு என்னிடம் ஏராளமான சம்பவங்கள் இருக்கிறது.

முதன் முதலில் உன்னிடம் காதலை தெரிவிப்பதற்கு ரோஜாவை கொடுத்தேன் இல்லையா,நீயும் வெட்கப்பட்டுக்கொண்டே வாங்கினாயல்லவா..
அன்றைய தினமே உன் அண்ணன்,
எனக்கு ரோஜா செடி புடிக்குமென்பதை தெரிந்துகொண்டு,ரோஜாக்கள் பிடுங்கப்பட்ட முள் செடியை,என் முதுகிலும்,மார்பிலும் ரோஜா நிறம் வருமளவுக்கு வருடி விட்டு சென்றான்.

நானும்..ஏதோ சிறுபிள்ளை,
அறியாமல் செய்துவிட்டதென,
நான்கு நாள் ஆஸ்பத்திரியில் ஹாயாக பெட் ரெஸ்ட் எடுத்துவிட்டு(அவ்வ்வ்,வலிக்குது நர்சம்மா) மறந்தே போய்விட்டேன்.

பிறகு ,உன்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே ,அவளும் நானும் பாடல் கேட்டோமே நியாபகமிருக்கிறதா?
பாடல் முடிந்ததும் நீ சென்றுவிட்டாய்,
நானும் கிளம்ப எத்தனிக்கையில்,
மீண்டும் அதே பாடல் ஒலித்தது.
அவனும் நானுமென பாடிக்கொண்டே என் முன் வந்து நின்றான் உன் அண்ணன்.

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட என் வாய் ,உன் அண்ணனுக்கு மிகவும் பிடித்திருக்கும் போல.ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்குமளவுக்கு அன்பு செய்துவிட்டு போய்விட்டான்.

இதையும் பெருந்தன்மையாய் மறந்து,உன் காதல் மட்டுமே முக்கியமென கருத்தில்கொண்டு,
அன்றொரு அழகிய நாளில்,உன்னை கட்டிப்பிடித்தேன் அல்லவா.
அதையும் ஒளிந்திருந்து,உன் அண்ணன் பார்த்து தொலைத்துவிட்டான் போல.
ஒரு வித மோதல் வெறியுடன்,ச்சி காதல் வெறியுடன் என்னை கட்டிப்பிடித்து,
ரோட்டில் உருண்டு புரள ஆரம்பித்தான்.

டேய் என்னை விடுடா,நான் அந்த மாதிரி ஆள் இல்லைடா என கத்திப் பார்த்தும் பலனில்லை,காதல் வெறியில் என்னை கைமா பண்ணி தொலைத்தான்.

அந்த கொடும் சம்பவத்தை மறக்க முடியாமல் ,இருந்த நேரத்தில்,
நீ என்னை தனியாக அழைத்து ,
சத்தமில்லாமல் முத்தமிட்டு மறக்க வைத்தாயல்லவா.
இதையும் எப்படியோ தெரிந்துகொண்டு ,
என்னை முட்டுசந்தில் மடக்கி வைத்து,

"நீங்க என்ன ஆளுங்கடா "என வினோதமாக கேட்டான்,
அது தெரியாது பாஸ்,
"ஆனா சத்தியமா நான் உன் ஆள் இல்லைடானு "தான் சொன்னேன்.
இதைப் போய் தாழ்வுமனப்பான்மையில் ,அவமானமாக நினைத்து ,ஆளவந்தான் நந்து கமல் போல அரை ஆடையாக்கி,என்னை அழகு பார்த்தான்.(அவ்வ்)

இதையும் உனக்காக பொறுத்துகொண்டு,ஓர் இனிமையான வேளையில் ,உன்னுடன் நெருங்கிப் பழகி உச்சமாக நினைக்கையில்,
அசம்பாவிதமாக உன் அண்ணன் என்னை ஓரக்கண்ணால் சைட்டடித்து,
என் உச்சக்கட்டத்தை உச்சாக்கட்டமாக 
ஆக்கித் தொலைத்தான்.
இதை உன்னிடம் சொன்னால்,உன் அண்ணனை அப்பல்லோவுக்கு அனுப்பி விடுவாய் என்பதால் அதையும் மறைத்து தொலைத்தேன்.

உன் தலையில்,செல்லமாக தட்டினால் ,
பதிலுக்கு என் தலையில் பாறாங்கல்லை வைத்து தட்டுகிறான்.உன் கன்னத்தை கொஞ்சலாக கிள்ளினால்,என் கன்னத்தை எம்பாமிங் செய்து வைக்கிறான்.

இன்னும் சொல்லப்போனால்,
நான் உன்னை டச் செய்ததை விட,
உன் அண்ணன் என்னை டச் செய்து ,டிச் செய்ததுதான் அதிகம்.
அவ்வளவு டார்ச்சர் செய்கிறான்.
ஈவ் டீசிங் கேள்விபட்டிருப்பாய்,
ஆடம் டீசிங் கேள்விப்பட்டதுண்டா ?
உன் அண்னன் செய்வது அதுதான்.

என் நிலையை மகாத்மா காந்தி அறிந்திருந்தால்,
என்று ஓர் ஆண் பட்டப்பகலில்,
எந்த தொந்தரவுமின்றி நடக்கிறானோ,
அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தமென்று கவலையுடன் கூறியிருப்பார்.

இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.
உன் அண்ணனிடம் மறக்காமல் கூறிவிடு.எத்தனை முறை என்னை வழிமறித்து கேட்டாலும்,
எடப்பாடி மீது சத்தியமாக ,
நான் அவனை காதலிக்கவே முடியாது.

Thursday, July 13, 2017

ஓவியாவும், ஒரு பிச்சைக்காரரும் !!!

பஸ் ஸ்டாண்ட்டில் நின்றுகொண்டிருந்தேன்.கார்ப்பரேட் உலகில் தூக்கி வீசப்பட்ட,மத்திய வயதில் இருக்கும் ஒருவர் ,அழுக்கடைந்த சட்டையுடன்,வரிசையாக கையை நீட்டிக்கொண்டே வந்தார்.என்னிடமும் கையை நீட்டினார்,சட்டைப் பாக்கெட்டின் அடியில் கிடந்த ரெண்டு ரூபாயை எடுத்து கொடுத்தேன்.
வாங்கிக்கொண்டு அருகில் இருந்த ஒருவரிடமும் கையை நீட்டினார்.
யோவ் ,வேலை எதுனா இருந்தா 
போய் பாருயா என யாசகம் கேட்டவரை ,
விரட்டிவிட்டார்.
அவரும் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் கடந்துவிட்டார்.

நான் ,யாசகம் கேட்டவர் ,நடந்துபோவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.அருகிலிருந்தவர் ,இவனுங்களை எல்லாம் நம்பக்கூடாது சார்.ஏமாத்திருவானுங்க.ஊர் ஊருக்கு நாலு பேர் இப்படி திரியுறானுங்க.அதான் நான் காசு போடலையென என்னிடம் சொல்லிக்கொண்டே,மொபலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தார்.

நான் ,பதிலேதும் சொல்லாமல்,
அவரின் மொபலை பார்த்துக்கொண்டிருந்தேன்.அதை உணர ஆரம்பித்திருப்பார் போல.
என்னை ஏறெடுத்து பார்த்து,
சார் ஓவியாவுக்கு ஒன்றை கோடி ஓட்டு விழுந்திருக்காம் தெரியுமா என கேட்டார்.
கேள்விபட்டேன் சார் என சொன்னேன்.

அதுல நானும் மெசேஜ் அனுப்பி ஓட்டு போட்டேன் சார் என என்னிடம் பெருமையாக கூறினார்.

இப்போது என் வாயில் ,எச்சில் ,
தானாக ஊறத் தொடங்கியிருந்தது.









Tuesday, July 11, 2017

இலுமினாட்டி காதல் சதிகள்

ஹாய்..
ஐ லவ் யூங்க ?

யாருயா நீ ?
உன்னை முன்ன பின்ன பார்த்ததே இல்லையே ?

நானும் தாங்க,
ஆனா ஐ லவ் யூனு சொல்ல சொல்லி ,
என்னை அனுப்பினாங்க.

யாருயா அனுப்பினா ?

கிட்ட வாங்க மிஸ்..
யார்கிட்டயும் சொல்லிடாதிங்க
என்னை அனுப்பினது இலுமினாட்டி க்ரூப்ங்க !

ஙே..
இழு மினாட்டியா ?
யாருயா அவனுங்க ?
சரி அத விடு,
அவனுங்க எதுக்குயா உன்னை அனுப்பனும் ?

அப்படி கேளுங்க,
இப்ப நான் ஐ லவ் யூ சொல்வேனாம்,
நீங்களும் ஓகேனு சொல்வீங்களா....ம்

என்னது ?

இல்லைங்க ஒரு பேச்சுக்கு வச்சுப்போமே,

சரி சொல்லு.

ஓகேனு சொன்னதும்.
கஃபே டே ஷாப் போவோமாம்,
கேஎப்சி போவோம்,
ஐ மேக்ஸ் தியேட்டர் போவோம்ல..

உன்கூட வா?

ஒரு பேச்சுக்கு சொல்றேங்க ..

சரி சரி.
சொல்லு

ஸ்டைலா லெவி ஜீன்ஸ் பேண்ட் வாங்குவோம்ல,
ஒரு லோடு பேர் அண்ட் லவ்லி வாங்குவோம்ல?

என்னது ?

இல்லைங்க..
நான் வாங்கி அப்பிப்பேன்ல,அத சொன்னேன்.

ஓ..ம்ஹும்.
சொல்லு

இப்ப நான் சொன்னதெல்லாம் பன்னாட்டு கம்பெனிங்களோட பெயர்,
அங்கெல்லாம் போய் நம்ம காசை கொட்டுவோம்ல.
அவனுங்க கல்லா கட்டுவானுங்கல்ல..

இதுதாங்க இலுமினாட்டி
கம்மினாட்டிங்களுக்கு தேவை.
அவனுங்க சம்பாதிக்குறதுக்கு நம்மள காதல் பண்ண சொல்லி,
நாலு வாரமா டார்ச்சர் பண்றானுங்க.
அதான் வேற வழியில்லாம ,
உங்க கிட்ட காதலை சொன்னேன்.

ஓ...சூப்பர்.
எனக்கு கூட ,இலுமினாட்டி க்ரூப் மெம்பர்ஸ்,
இந்த மாதிரி ஒருத்தன் வருவான்னு ,
சொல்லி வச்சிச்சு..

அட முன்கூட்டியே
சொல்லிட்டாங்களா..?
சூப்பர்.
என்னை பத்தி
என்ன சொன்னாங்க மிஸ் ?

அதொன்னுமில்லை,
அடிடாஸ்ங்கிற பன்னாட்டு கம்பெனில புதுசா இப்ப செருப்பு மாடல் போட்டிருக்காங்களாம்,
சோ ..
இந்த செருப்பு பிஞ்சிட்டா,
அந்த செருப்பை போய் வாங்குவேன்ல.
அவனுங்க கல்லா கட்டுவானுங்கல்ல.

அவ்வ்..
சாரிங்க..
எல்லாத்துக்கும் இந்த பரணி பயதாங்க காரணம்.
டேய் பரணி..இந்தா வர்றேன்டா
(எஸ்கேப்)

Saturday, June 24, 2017

கடவுள் புத்தகம் !!!

நான் வசிக்கும் தெருவில்,
ஒரு கடவுள் சிலை இருக்கிறது.
அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த  சிலையில்,
நான்கு கைகள் இருந்தன.
ஒரு கையில் சூலாயுதமும்,
இன்னொரு கையில் பறவையும்,
இன்னொரு கையில் பழங்கள் போலவும்,
மற்றொரு கையில் ஒரு புத்தகத்தையும் வைத்திருந்தார்கள்.

தெருவை கடந்து செல்லும் போதெல்லாம்,
அந்த கடவுள் சிலையின்,
புத்தகம் வைத்திருந்த கையை மட்டும், பார்த்துவிடுவது வழக்கம்.
அப்படி என்னதான் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தில் ,என நீண்ட நாளாக ஆர்வம் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு,
"எல்லாம் கடவுள் கையில் இருக்கு " என அடிக்கடி சொல்லுகிறாரே.
ஒருவேளை  இந்த கடவுள் சிலையின் கையில் இருக்கும் புத்தகத்தில் ,ரஜினி குறித்து ஏதேனும் எழுதியிருக்குமோ என்கிற யோசனையும் எனக்குள் வந்துபோனது.

பத்த்தாத குறைக்கு ,
பக்கத்து தெரு கோபால் %&%%%ங்கார் கூட,எங்கள் வீட்டிற்கு வந்து,அவா அவாவுக்கு என்ன கொடுப்பினையோ,
எல்லாம் அந்த பகவான் முன்னமே எழுதி வச்சிருப்பானு ,
வினோத பாஷையில் விளம்பி வைத்ததும்.என் காதில் விழுந்து தொலைத்திருந்தது.

இனிமேலும் பார்த்துக்கொண்டே இருப்பது வேஸ்ட்,
இன்னிக்கு அந்த புத்தகத்தை
லவட்டிட வேண்டியதுதான் என்கிற முடிவோடு ,நடுராத்திரியில் ஆள் அரவமில்லாத நேரத்தில்,
கருப்பு போர்வை போர்த்திக்கொண்டு ,அந்த சிலைப்பக்கம் நடந்தேன்.

இந்த கோபால் &%&%காரரையும்,
அந்த ரஜினியை பற்றியும் ,
புத்தகத்தில் கண்டிப்பாக ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்று,மைண்ட் வாய்ஸ்சுடன் நம்பிக்கையோடு பேசிக்கொண்டே ,கடவுள் சிலையை நெருங்கினேன்.
அக்கம் பக்கம் ஒரு பார்வை பார்த்தேன்.யாருமில்லை.
எதிரே நிற்கும்
கடவுளும் என்னை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இருந்தாலும் சின்னதாக பயம் தொற்றிக்கொண்டிருந்ததை,
"பகு பகு பாகுபலியென்கிற" மந்திரத்தை,
முனங்கி ,பயத்துக்கே பயம் காட்டி ஓடவைத்துவிட்டு  ,ஒருவழியாய்
கடவுள் சிலையின் நான்காம் கையிலிருந்த புத்தகத்தை இரவல் ?வாங்கிக்கொண்டு,திடு திடுவென வீட்டை நோக்கி ஓடினேன்.

கடவுள் புத்தகம் கைக்கு வந்துவிட்டதால்,
அத்தனை பேரின் தலையெழுத்தும்,
என் கையில் இருப்பது போன்ற ,பிரம்மை எனக்குள் சில நொடிகள் வந்துபோனது.
வீட்டிற்குள் நுழைந்தவுடனே,
கையிலிருந்த கடவுள் புத்தகத்தை ,
மிகப்பெறும் ஆவலுடன் திறந்து பார்த்தேன்.


"இன்னுமாடா என்னையும்,
அவனுங்களையும் இந்த உலகம் நம்புது ?
என எழுதப்பட்டிருந்தது !!
x

Saturday, June 17, 2017

சிம்பு முளைத்திருக்கிறான் !!!

மிக இயல்பான அவளை..
தற்செயலாகதான் சந்தித்தேன்.
அதென்ன மிக இயல்பான அவளென  நீங்கள் கேட்டால்,
சொல்ல ஏராளமிருக்கிறது.
ஆகவே..
நா(மா)ட்டு பிரச்சினையிலிருந்து சற்றே விடுபட்டு..
என் கதைக்கு வாருங்கள்.

அதிகாலையில் 5மணிக்கு
எழுந்து ,கோலம் போட்டு,
செல்பி ஸ்டேட்டஸ் போடுபவர்களுக்கு மத்தியில்,
இவள் 4.30மணிக்கே எழுந்து,
வாக்கிங்...டான்ஸ் கிளாஸ்,டிரைவிங் கிளாஸ்,ஃப்ளூட் கிளாஸ் முடித்துவிட்டு,
குல்பி ஐஸ்  சப்பிக்கொண்டு,
வீடு வந்து சேரும்போதே,
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என மணிவன்னன் சொல்வது போல ஆச்சர்யம் காட்டுகிறாள்.


பேஸ்புக்கில் பல பெண்களைப் போல,
பூ ..மரம் ,செடி போட்டோக்கள்
அப்லோட் செய்து ,
ஹவ் கியூட் பிரெண்டஸ் .என..
அட்டகாசம் செய்யாமல்,

எனக்கெல்லாம் நீங்க லைக் பண்ண்னுவீங்களா பிரெண்ட்ஸ் என
அலும்பு பண்ணாமல்,
சில்லி பிரைட் ரைஸ்..
யும்மி..யம்மியென அழிச்சாட்டியம் செய்யாமல்,
ஐன்ஸ்டீனையும்,ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சையும் ,கார்ல் மார்க்ஸ்சையும்,
எளிமையாக புரியும்படி எழுதிக்கொண்டிருந்தாள்.


ஞாயிற்றுக்கிழமை ஆனால், ஏசுவின் மகிமையென பல கும்பல் கிளம்பிக்கொண்டிருக்க,
இவளோ இயல்பாய் லைப்ரெரி சென்று அறிவியலின் மகிமையை படித்துக்கொண்டிருப்பாள்.

கோவிலுக்குள்ளே செல்லும்போது ,ஓம் நமோ நாரயணா என எல்லாரும் விளம்பிக்கொண்டே நுழைந்தால்,
இவள் மட்டும் பெரியாருக்கு நன்றியென கூறிவிட்டு கோவிலினுள் நுழைகிறாள்.

தியேட்டரில் எல்லாரும் பாகுபலி பெர்பார்மன்ஸ்சை உற்று நோக்கினால்,
இவள் மட்டும் பாகுபலிக்கு பின்னால் நிற்கும் சைட் ஆர்ட்டிஸ்டின் ஆக்டிங்கை உற்று நோக்குகிறாள்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பெண்கள்,
தெய்வ மகள் சீரியல் பார்க்கும் நேரத்தில்,இவள் வீட்டில் மட்டும் கேம் ஆப்  த்ரோன்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.
மற்ற வீடுகளில் பாளையத்து அம்மன் படம் ஓடினால்,இவள் வீட்டில் பராசக்தி ஓடிக்கொண்டிருக்கும்.
ஒரு நாள் பிரெஞ்ச் மொழி கற்கிறாள்,
இன்னொரு நாள் ஜெர்மன் மொழி படிப்பாள்.
அப்போ ஹிந்தி மொழியென எந்த பக்தாஸ்சாவது,ஆர்வமாக கேட்க முன்வந்தால்,அவளின் இன்னொரு செருப்பில் விரிசல் விழும் ஆபத்திருக்கிறது.அதனால் வாயை மூடி படிக்கவும்.

ரேஷன் கடையில்,
பெண் என்றும் பாராமல்,கியுவில் நிற்கவைத்துவிட்டார்களே என,
டெம்ப்ளேட்டாய் புலம்பாமல்,
ஆண் என்றும் பாராமல்,கியுவில் நிற்கவைத்துவிட்டார்களே என எனக்கு சப்போர்ட்டாய் வழிவிடுவாள்.

வேலையென வந்துவிட்டால்,
தூங்குமூஞ்சி தீபாத்தனமாக இல்லாமல்,
தூக்கி போட்டு பந்தாடும் "தங்கல்" பட,கீதாத்தனமாக காரியத்தை முடிக்கிறாள் .


அவ்வளவு ஏன்..
நூறு பேர் கலந்து கொண்ட இண்டெர்வியுவில்,
இன்றைய தமிழக முதல்வர் யார்.என்ற கேள்வி கேட்கப்பட்டதில்,
99பேரும் எடப்பாடி பழனிச்சாமியென ,
தவறான பதிலை சொல்ல,
இவள் மட்டும் வெங்கையா நாயுடு என
சரியான பதிலை சொல்லி,
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தாள்.


இவ்வளவு ஆற்றல் கொண்ட அவளுக்கு,
திருஷ்டிப் பொட்டாய்,ஒரு சிறு அளவு ஜெனிலியாத்தனம் இருந்ததை இன்றுதான் அறிந்துகொண்டேன்.
சாலையில் எதேச்சையாக எதிரெதிரே சந்தித்தபோது,தவறுதலாய் நேருக்கு நேராக முட்டிக்கொண்டோம்.

ஐயோ சாரிங்க...
தெரியாம பட்டுருச்சு..
ஆனா பொய்தீகப்படி ,மூனு வாட்டி முட்டாம போனா,
கொம்பு முளைச்சிடும்ங்க..
அதனால ப்ளீஸ் என..
இரெண்டொருமுறை மீண்டும்,
தலையில், முட்டிவிட்டு சென்றாள்.

அவள் சொன்னது உண்மைதான் போல,
இப்போது கொம்பு முளைக்கவில்லை,
ஆனால் ,அதற்கு மாறாக எனக்குள் ,
சிம்பு முளைத்திருக்கிறான் !!!
x

Tuesday, May 23, 2017

புதிய ஜென் கதை

துறவி? ஒருவர் ,ஆட்டையாம்பட்டி ஆசாமியை தேடி வந்திருந்தார் .
என்ன விசயமென ஆசாமி கேட்டதும்,
துறவி அழுது வடிந்து கொட்ட ஆரம்பித்தார்.

ஆசாமி ஐயா,
என்னிடம் போதுமான அளவுக்கு,
பணமிருக்கிறது ,
பல பங்களாக்கள் இருக்கிறது,
எக்கச்சக்கமாக வளைத்து போட்ட புறம்போக்கு நிலமிருக்கிறது,
அரசியல் பலமிருக்கிறது,
மீடியா பலமிருக்கிறது,
பெண் சிஷ்யைகள் இருக்கிறார்கள்,
ஆனாலும் ,வாழ்க்கை மீது, ஒரு குறை இருக்கிறதாக என் மனதிற்குள் படுகிறது,
இன்னும் நாம் முன்னேற வேண்டுமோ என மனம் ஏங்குகிறது ?
இதற்கு ஏதும் வழியிருக்கா ஆசாமியென
புலம்பி முடித்தார் துறவி  ?

இதை புன்முறுவலுடன் அமைதியாக கேட்டு முடித்த,
ஆட்டையாம்பட்டி ஆசாமி,
என்றாவது நீ ரேஷன் கடை கியுவில் நின்றிருக்கிறாயா ?
என்றாவது ,நீ பால்காரன்,
எப்போது பால் கொண்டு வருவானா என காத்திருக்க்கிறாயா ?
மாசக்கடைசியில் மளிகை சாமான் வாங்க காசில்லாமல் அல்லாடியிருக்க்கிறாயா ?
5000ரூபாய் கடனுக்காக பேங்க் மேனேஜரிடம் வசவு வாங்கியிருக்கிறாயா ?
,மாதா மாதம் வாகனங்களுக்கு EMI கட்ட முடியாமல் திண்டாடியதுண்டா?
குறைந்தபட்சம் மனைவியிடமோ,அம்மாவிடமோ ,அரசு ஊழியர்களிடமாவது திட்டு வாங்கியிருக்கிறாயா ?
என ஆசாமி அடுக்கியதும்,
துறவிக்கு வேர்த்து கொட்டியிருந்தது.

இதை எல்லாம் நீ அனுபவித்தால்,
வாழ்க்கை மீதான புரிதல் ஏற்படும்,
யாரையும் இப்படி ஏமாற்றி பிழைக்காதிருக்க வழி ஏற்படுமென 
ஆசாமி ,சொல்லி முடித்தார்.

இதை கேட்ட துறவிக்கு ,மனம் தெளிந்தது.
ஆசாமியா அடிபட்டு சாகுறதை விட,
சாமியாரா வேஷம் கட்டி சந்தோசமா சல்லாபிச்சுட்டு இருக்கலாமென்ற கொள்கையுடன்,ஆசாமியிடமிருந்து,
ஆடி காரில் விடைபெற்றான் துறவி .

Monday, March 27, 2017

பல்புகள் பலவிதம் !!!

ரன்னிங் ட்ரெய்ன்ல,ஸ்டைலா
இறங்குறேனு ரிவர்ஸ்ல இறங்கித் தொலைச்சிட்டேன்,
தடுமாறி கீழ விழும்போதுதான்,ஸ்கூல்ல படிச்ச
நியூட்டன் விதி நியாபகம் வந்துச்சு.

உடனே..
For every action,there is an equal and opposite reactionனு எல்லார் முன்னடியும்
பாடம் எடுக்க ஆரம்பிச்சேன்.

கூட்டத்துல ஒருத்தர்,தம்பிக்கு கண்டிப்பா
தலையிலதான் அடிபட்டிருக்கும்,ஹாஸ்பிட்டலுக்கு தூக்குங்கப்பானு கத்த ஆரம்பிச்சிட்டார்.

ஐய்யயோ..அண்ணே நான் நல்லாத்தான்னே இருக்கேன்,ஒன்னும் பிரச்சினையில்லைணேனு சொன்னாலும் ,
பேசாம வாங்க தம்பி,இப்படித்தான் என் பக்கத்து வீட்டு பையன் ஒருத்தன்,நான் நல்லாத்தான் இருக்கேன் ,நல்லாத்தான் இருக்கேன்னு 20வருஷமா சொல்லிட்டு இருக்கான்னு,திகில் உதாரணத்தை கிளப்பிட்டே,கையை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

அப்புறம் ஒருவழியா...எல்லாருக்கும் டீ வாங்கி கொடுத்து,
அம்மா அப்பல்லோல செத்ததுல ஆரம்பிச்சு,ஆர்கேநகர் இடைத்தேர்தல் கலாட்டா வரை வரிசையா சொன்னதுக்கு அப்புறம்தான்,
சரி தம்பி,நீங்க வீட்டுக்கு போங்கனு வுட்டானுங்க.

அப்பல்லோவுக்கு போய்ருக்க வேண்டியவன்..
50ரூபாய்க்கு டீ வாங்கி கொடுத்து
கொஞ்ச நாளைக்கி தப்பிச்சிட்டேன் .

ஈ ஈ ஈ .

ஏசு "தேவர்"

எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன்,
ஞாயித்துக்க்கிழமை ஆனா போதும்,
குளிச்சு முடிச்சுட்டு கரெக்டா ,
சர்ச்ல பிரார்த்தனை கூட்டம்னு கிளம்பிடுறான்..

அவனை வம்படியா மறிச்சு,
ஏசு மேல இவ்ளோ தீவிரமா ,எப்படியா மாறுனனு கேட்டேன்.

என்ன இப்படி கேட்டுட்ட,
இங்க பக்கத்துல வாலே,உனக்கொரு விசயம் தெரியுமா ?
ஏசு எங்க சாதிக்காரர்ல,
"தேவன் ஏசுனு "அடிக்கடி சொல்றதை கேட்டிருக்கியா ?
அப்படி சொல்லும்போது எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமாலேனு ,
காலரை தூக்கிவிட்டு போறான்.
அடப்ப்பாவிங்களா.
கொஞ்சம் விட்டா முத்துராமலிங்கத்தோட முப்பாட்டனார்தான் ,எங்க  ஏசு தேவர்னு
சொல்வானோனு பயம் வந்து தொலைஞ்சிடுச்சு.

அடேய்,இந்த கதையெல்லாம் ஏசு? கேட்டா,
இன்னொருக்கா சிலுவைல தொங்குவாரேடா ?

Friday, March 3, 2017

FLAT RICE BREAD தெரியாதா ?

ஓர் அகோரப்பசி வேளையில ஒரு ஹோட்டலுக்குள்ள  நுழைஞ்சேன் .
வழக்கம்போல மெனுவை கொண்டு வந்து வச்சானுங்க.
இட்லி சொல்லப்போற எனக்கு எதுக்குடா மெனுகார்டுனு அதிகப்பிரசிங்கத்தனமா பேச உடம்புல தெம்பு இல்லாததால ,
நாலு இட்லி கொண்டு வாங்கணேனு ஆர்டர் பண்ணிட்டு
உக்காந்து வேடிக்க பார்க்க ஆரம்பிச்சேன்(எவன் எவன் என்ன சாப்பிடுறான்னுதான் ,ஈ ஈ ஈ ).


அப்பதான் கவனிச்சேன்,பக்கத்து டேபிள்ள 
ஒரு பளிச் ப்ளீச் பண்ண அம்மணி உக்காந்திருச்சு,

சர்வர் வந்து பவ்யமா ,
மேடம் மெனு சொல்லுங்கனு கேட்டான் .

அந்த அம்மணியோ,
ஒன் FLAT RICE BREAD கொடுங்கணானு கேட்டு வச்சிருக்கு ,
இதை கேட்ட ஹோட்டல் செர்வரும் ,நானும் முழிக்க ஆரம்பிச்சோம்.
அது என்ன புது ,ஐட்டம்டா ?
பேசாம நாமளும் அதையே சொல்லாலாமோனு தோனினாலும்,
போனவாட்டி ஸ்டைலா "கட்லட் "ஆர்டர் பண்ணிட்டு முழுங்கமுடியாம காறித்துப்புன நியாபகம் வந்துபோனதால ,பயந்துபோய் அந்த செர்வர பார்க்க ஆரம்பிச்சேன்.


அந்த செர்வரும் ,தலையை சொறிஞ்சிகிட்டே,சாரி மேடம்  
அப்படி ஒரு ஐட்டம் மெனுவுலயே இல்லைனு
(ஹப்பாடா ,இவனும் நம்ம கேஸ்தான்) தான் சொன்னான் .
உடனே அந்த அம்மணி ,என்ன கோவத்துல இருந்துச்சோ,
ஹே  மேன் ,Flat rice bread இல்லையா ?
உங்க மேனஜர கூப்டு மேன்னு ,எகிற ஆரம்பிச்சிருச்சு ..
பாவம் அந்த செர்வரோ ,சத்தியமா அப்படி ஒரு ஐட்டம் இல்லை மேடம்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டான்.

அந்த அம்மணியும் ஒருவழியா 
சமாதனம் ஆகி,
What the hell ,ஃபிளாட் ரைஸ் பிரட்னா என்னனு தெரியாதானானு புலம்பிட்டு,
சரி உனக்கு புரியுற மாதிரி சொல்றேன்,
ஒரு  "தோசை "கொண்டு வானு  ஆர்டர் பண்ணுது .

அடப்பாவிங்களா..
ஒரு தோசையத்தானா 
இத்தனை திருப்பு திருப்புன ?

Tuesday, February 28, 2017

இந்தி(தீ)ய அரசியல் !!!

ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்ன,
ரானுவ வீரன் சாப்பாடு சரியா போடலைனு ஒரு வார்த்தைதான்
சொன்னான் .தேசமே மத்திய அரசை கேவலமா பார்த்துச்சு.
இப்ப அந்த ராணுவ வீரன் ,சரியா வேலை பார்க்கலைனு சொல்லி  சஸ்பெண்ட் செய்யப்பட்டு வச்சிருக்கிறதா நியுஸ் வருது.

இதே மாதிரி போன மாசம் ,ஜல்லிக்கட்டு,விவசாய பிரச்சினைக்கு ,தன்னெழுச்சியா போராட வந்த மாணவர்களுக்கு,6நாளா அரசாங்கமும்,மீடியாவும்,நடிகர்களும்  பாராட்டு தெரிவிச்சுட்டு இருந்தானுங்க ஆனா அடுத்த 7வது நாள் போராடுன மாணவர் எல்லாரும்
"சமூக விரோதிகள்,
"ஐஎஸ்ஐஎஸ் ",
"அல்கொய்தா " தொடர்பு இருக்குனு இவனுங்களே கூச்சப்படாம சொல்லி ,FIR ரெடி பண்ணி ,அதை சட்டசபைலயே சொல்லி அசிங்கப்படுத்தி முடிக்கிறானுங்க.

நாளைக்கு நெடுவாசல்ல போராடுற அப்பாவி மனிதர்களையும் தேச துரோகினு (இப்பவே ஒருத்தன் கூவிட்டான்) கார்ப்பரேட் காசை துன்னுட்டு கதை ரெடி பண்ணாலும் ஆச்சர்யப்படுறதிக்கில்லை .

இப்படித்தான் ,சுவாதி கொலை வழக்குல மர்மம் இருக்குனு பேச்சுதான் எழுந்துச்சு,அடுத்த இருபது நாள்ல ராம்குமார் கரண்ட் வயர கடிச்சு செத்துட்டதா பிணத்தை தரானுங்க.

பத்து நாள் முன்னாடி,
ஒரு டாக்டர் ,ஜெ மரணம் பத்தி பேசுன வீடியோ வாட்ஸ்சப்ல பரவுச்சு.
இப்ப அந்த டாக்டரே போலி டாக்டர்னு
இவனுங்களே செர்ட்டிபிகேட் ரெடி பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிட்டானுங்க.

நாளைக்கு லண்டன் டாக்டர்
ரிச்சர்ட் பீலே ,உண்மைய உளரினாலும் ,அந்தாளு டாக்டரே இல்லை,கொசு மருந்து அடிக்க அப்பல்லோவுக்கு வந்தவன் சார்ன்னு கூச்சப்படாம சொல்வானுங்க.
ஏன்னா ..இங்க சிஸ்டம் டிசைன் அப்படி .
ரொம்ப கொடூரமான கேவலமா இருக்கும்.

ஒரே ஒருநாள் ஸ்ரீஹரிகோட்டால  ராக்கெட் விடுறதை
பெருமையா பேசுறோம்,
தினம் தினம் பொது ஜனங்களின்
நவதுவாரங்களிலும் ராக்கெட் விட்டு
நாசப்படுத்தும் இந்தீய கோட்டா சீனிவாசராவ் வில்லத்தன  அரசியலை எப்போது காறித்துப்ப போகிறோம் ?

Tuesday, February 21, 2017

சிங்கம் 3 - ஒரு சமூக பார்வை !

சமீபத்தில் சிங்கம் திரைப்படத்தை பார்த்தேன் .அதில் துரைசிங்கம் என்கிற பிரதான போலிஸ் கேரக்டர் ,நாயகியிடம் , "பொம்பளப்புள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாதென "  சொல்லிவிட்டு செல்கிறார்.

ஏதோ போலிஸ் ஸ்டேஷனில் பெண் காவலர்களே இல்லாத நாடு போல,
பெண்கள் காவல்துறையிலோ ,காவல்நிலையத்திற்கோ வருவது தவறான செயல் என்கிற தொனியில் வைக்கப்பட்ட காட்சி போல இருக்கிறது.
இவர் சொல்வதுபடி பார்த்தால்,
பெண் காவலர்களை எல்லாம்,
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியதான் 
நிக்கவச்சிருக்காங்களா ?
எந்த அடிப்படை சமூக அறிவே இல்லாமல்,எப்படி இந்த துரைசிங்கம்,
போலிஸ் உயர் அதிகாரியாக ஆனான் என்பதே சந்தேகமாக உள்ளது.
நாட்டுல மகளிர் காவல் நிலையம்லாம் இருக்குதுங்கிற விசயம் இந்த பக்கிக்கு தெரியுமா தெரியாதா ?

பெண்களின் பாதுகாப்பு கருதி சொல்லப்பட்ட வசனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட,
போலிஸ் ஸ்டேஷனுக்கு பெண் சென்றால்,பாதுகாப்பில்லாத சூழ்நிலையில்தான் காவல்துறை செயல்படுகிறது என்பதை இந்த துரைசிங்கம் ஒப்புக்கொள்கிறானா?
அப்படியென்றால் காவல்துறை காவாளிகளை களைவதை விட்டுவிட்டு,
ஊர் பிரச்சினையை தீர்க்க வீராப்பாக 
கிளம்புவதெல்லாம் காமெடியாக தெரியவில்லையா ?
இதுபோன்ற குணநலன் கொண்ட சொறிநாய்களால்தான் ,டிஎஸ்பி விஷ்னுப்பிரியா மன உளைச்சலாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்திகளாவது தெரியுமா ?தெரியாதா ?

முதல்ல பல்லை கடிச்சிட்டு பேசுறதுக்கு பதிலா,
ஏதாவது பயனுள்ளதா பேசு நாயே !

Monday, February 20, 2017

ஜக்கி வாசுதேவ் சாமிய நீங்க பார்த்திருக்கீங்களா ?

ஜக்கி வாசுதேவின் புகழை ?அறிந்த,
ஆட்டையாம்பட்டி இளைஞன் ஒருவன் ,
அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென கோவையை வந்தடைந்தான்.
ஈஷா மையத்திற்கு சென்று,சுவாமியை பார்க்கனும்னு ஆர்வத்தோடு கேட்டிருக்கிறான்.அவர்களும் நிச்சயமா பார்க்கலாம்,அதற்குமுன் அறக்கட்டளைக்கு 5000கட்டி சேவையை ஆற்றுமாறு கேட்டிருக்கிறார்கள்.
அப்ப்பாய்ண்ட்மெண்ட் பீஸ்சைத்தான்
அறக்கட்டளை நிதியென நாசூக்காக கேட்கிறார்களென அறியாத ஆட்டையாம்பட்டி இளைஞனும் 5000ரூபாயை கட்டி ,சுவாமியை பார்க்க காத்திருக்கிறான்.
நீண்ட காத்திருப்புக்குப்பின் ,லெவி ஜீன்ஸ்,ரேபான் கூலிங் கிளாஸ் ,ரீபோக் ஷூ அணிந்த ஒருவன்,
நம்மாள் அருகில் அமர்ந்து,சொல்லுங்கோ இன்னா வேணுமென கேட்டிருக்கிறான்.
இவனும் ஒரு டீ போதுமென அடக்கமாக கேட்டுக்கொண்டே சுவாமி எப்போ வருவாரென கேட்டிருக்கிறான்.
பதில் சொல்லாமலே கிளம்பியவனை பார்த்து,இளைஞன் புன்னைகைத்துக்கொண்டு ,"டீ"ல சக்கரை தூக்கலா இருந்தாலும் ஓகேவென சொல்லி காத்திருக்கிறான்.
டீயும் வரவில்லை,சுவாமியும் வரவில்லை.
நேரம் முடிந்துவிட்டதென அவ்விளைஞனை அப்புறப்படுத்த பார்த்த சேவகர்களிடம் , சுவாமிய நான் பார்க்கலையே என எவ்வளோ கெஞ்சியும் ,அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அவனை அனுப்பிவிடுவதிலயே குறியாக இருந்திருக்கின்றனர்.
இதுபோன்று பலரும் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு பணம் கட்டியதாகவும்,ஒரு கூலிங் கிளாஸ் குருட்டு நாய்,இன்னா வேனும் சொல்லுங்கோவென கேட்கிறானாம்,
"சுவாமி எங்கேவென கேட்டதும்",
டீ கொண்டுவருவதாக சொல்லி ஏமாற்றிவருவதாகவும் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

Friday, February 17, 2017

ஆல்பிரட் கதையும் ,போயஸ் ராணிகளும் !!!

பொதுச்சொத்துக்கள்,அரசுசொத்துக்களை வளைத்துப்போடுவது என்றாலே,அம்மாவுக்கும்,
சின்னம்மாவுக்கும் அலாதி பிரியம்.
தனியார் சொத்துக்களும் கூட ,இவர்களுக்கு பிடித்துவிட்டால்,யாராக இருந்தாலும் விடாப்படியாக பறித்து வளைத்துப் போட்டுவிடுவார்கள் .
இவர்கள் ஏதோ 91-96வரை மட்டுமே பொது-தனியார் சொத்துக்களை வாங்குவதில் (வளைப்பதில்) ஈடுபாடு காட்டியது போலவும்,அதன் பிறகு (திருந்திவிட்டது போல )எதுவும் வாங்காதது போல ஒரு பொது பிம்பம் கட்டமைக்கப்பட்டு வந்திருப்பதை பார்த்து,அம்மாவும் சின்னம்மாவுமே நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்வார்கள்.
சிறுதாவூர் பங்களா கேஸ்,பிரபல கொடநாடு எஸ்டேட் அபகரித்தல் ,
திராட்சை  தோட்டம் வழக்கு,
வெளிநாட்டு பண வரவு வழக்குகளென பல வழக்குகளை,பணம் கொடுத்தோ,
சட்ட ஓட்டைகளை வைத்தோ ,தப்பித்து வர கைதேர்ந்து விட்டவர்களாகி விட்டதால்,
91-96க்கு பிறகு ,வாங்கிய ,பிடுங்கிய சொத்துக்களை எல்லாம் ,
சட்ட ஓட்டைகளை வைத்து, சாமர்த்தியமாக சமாளிப்பதில் PHD முடித்துவிட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கூட ,1000கோடிக்கு தியேட்டர்களை ,ஊரறிய வளைத்துபோட்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.1000கோடி எப்படி வந்ததென நீங்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் கூட ,இவர்கள் அசால்டாக கோர்ட்டில் சமாளிப்பார்கள்.உங்களை அடாவடியாக அடித்தும் சமாளிப்பார்கள்.அது வேறு விசயம்.அந்தவகையில் சொத்துக்குவிப்பு வழக்கு இவர்களுக்கு கெடுதலை தந்ததை விட,பல வகைகளில் நன்மைகள் தந்திருக்கிறது.அந்தளவுக்கு சட்ட நெறிமுறைகள் படி கொள்ளையடிப்பதில் திறமைசாலிகளாக ?பரினாமம் அடைந்திருக்கிறார்கள்.
டார்க் நைட் என்கிற திரைப்படத்தில்,
ஆல்பிரட் ,பேட்மேன் ப்ரூஸ்சிடம் ஒரு கதை சொல்லுவார்.
அதில் வைரங்கள் அடிக்கடி கொள்ளையடிக்கப்படுகிறது.
ஆனால் அந்த வைரங்கள் எந்த கள்ளச் சந்தையிலும் கிடைக்காததால் ,காவல்துறையினர் குழப்பமடைகிறார்கள்.
பிறகுதான் தெரிகிறது ,வைரங்களை கொள்ளையடிப்பது அவன் வயிற்றுப்பாட்டுக்கு அல்ல,வைரங்களை திருடுவது அவனின் பொழுதுபோக்கு என.
இப்படித்தான் அம்மாவும்,சின்னம்மாவும் வயிற்றுப்பாட்டுக்காக சொத்துக்களை வளைக்கப்போய்,பிறகு அதையே பிடித்த பொழுதுபோக்காக மாற்றிக்கொண்டார்கள்.
இப்போது கூட பாருங்களேன்,
அரசின் பொது சொத்தான,மெரினாவில் அம்மாவும்,அரசின் சொத்தான பரப்பன அக்ரஹார ஜெயிலில் சின்னம்மாவும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Saturday, February 4, 2017

பவுடர் பங்கஜம் !!!

வெண்ணிற ஆடை
என்கிற புதிய படத்திற்காக
ஆர்ட்டிஸ்ட் தேர்வு நடைபெற்றது.
அப்போது முன்னனி நாயகியாக
இருந்த பவுடர் பங்கஜம் அவர்களையே
இப்படத்திற்கு புக் செய்திருந்தார்கள்,
அந்த சமயமாக பார்த்து,
கோமளவள்ளி என்கிற இளம்பெண் ஒருத்தி சான்ஸ் கேட்டு வருகிறாள்.
கதையிலோ மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
அதற்கு பவுடர் பங்கஜத்தை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்பது ஹாலிவுட்காரர்களுக்கு கூட தெரிந்த விசயம்.
இந்த நேரத்தில் சான்ஸ் கேட்டு வந்த
கோமளவள்ளியை பார்க்க பாவமாக இருந்தது.என்ன செய்யலாமென ,இயக்குனர் ஸ்ரீதர் யோசித்தார்.விசயத்தை பவுடர் பங்கஜத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் .
பவுடர் பங்கஜம் அவர்களோ
பெருந்தன்மையுடன் அந்த இளம்பெண் கோமளவள்ளியை வரவழைத்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டது போல நடித்து காட்ட சொன்னார்.ஓரளவு சுமாராக கோமளவள்ளியும் நடித்துக் காட்டினார்.
பிறகு இயக்குனர் ஸ்ரீதருடன் கலந்தாலோசித்த நடிகை பவுடர் பங்கஜம் ,வெண்ணிற ஆடை படத்தில்
நடிப்பதற்கான வாய்ப்பை கோமளவள்ளிக்கே விட்டுத்தந்தார்.
அந்த கோமளவள்ளி வேறு யாருமல்ல,
முன்னாள் முதல்வர் "ஜெயலலிதாதான் "!அத்தகையை ஜெயலலிதாவிற்கு நடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பவுடர் பங்கஜம் வேறு யாருமல்ல.
நம் மாண்புமிகு,தியாகத்தின் திருவுருவம் சின்னம்மா என்பது நம்மில்
கித்னி பேருக்கு தெரியும் ?
இப்போதாவது புரிகிறதா ?
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல .

Sunday, January 29, 2017

வர்லாம் வர்லாம் வா (திரைப்பட விமர்சனம் )

நேற்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.மிக அட்டாகசமான கதைக் களம்.முறையற்ற ,அங்கீகாரமில்லாத 
மருத்துவ கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகள்,அதனால் பாதிக்கப்படும் மாணவர்களென சிறப்பாக சென்றுகொண்டிருந்தது .உலக சினிமாக்களில் கூட இக்கதைக்களத்தை 
ஆவனமாக கொண்டுசெல்லுமளவு சிறப்பாகவே எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் என்ன பிரச்சினை என்றால்,
இடை இடையே கதைக்கு சம்பந்தமே இல்லாத  ஒருவன் வருகிறான்.
நான் மோதுனா தாங்கமாட்ட....
சுண்டு விரல்ல தொட்டுப்பார்ரா...
தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்கு 
அல்லு அதிகம்னு ,சம்பந்தமே இல்லாமல் 
கிறுக்கத்தனமா கத்திட்டு போறான்.

பிறகு திடிரென கதைக்கு வருகிறார்கள்,
கொஞ்ச நேரம் கழித்து ,அதே கிறுக்கு பையன் வந்து ,
குத்தாட்டம் போடுறான்,

நாலு பேரை அடிக்குறான்.
யார் இவண்?
ஒரு சமூக பிரச்சினை கதைக்கு இவ்ளோ இடைஞ்சல் பன்றான்.
முதல்ல அவனை தள்ளிப் போங்க சொல்லுப்பா என கத்தவேண்டும் போல இருந்தது.
.

வசதிகளே இல்லாத தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் 
இன்னும் நிறைய இருக்கின்றன.அதை ஆவணப்படுத்தும் படத்தில்,
கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவனை ஏன் படத்தில் வைத்தார்களென தெரியவில்லை.கதையின் வில்லனான கசாப்பு கடை கல்வி வள்ளல் கதாப்பாத்திரத்தை விட ,எனக்கு இந்த நபர்தான் கதையை சொல்லவிடாத வில்லனாக தெரிந்தான்

அந்த நபர் வரும் சீன்களை எல்லாம் வெட்டியெடுத்தாலே போதும்,
இந்த திரைப்படம் உலக சினிமாக்களில் கூட திரையிட தகுதியுள்ள படமாக அமைந்திருக்கும் என்பது ,என் கருத்தாக மட்டுமில்லை,
சினிமா ஆர்வலர்களின் கருத்தாகவும்  இருக்கிறது.

Wednesday, January 25, 2017

மெரினா சர்வாதிகாரங்கள் !!!

எச்சரிக்கை :
இது யாரையும் புண்படுத்தாத நோக்கில் புனையபட்ட செயற்கை கதை அல்ல,
அனைவரையும் புண்படுத்தும் உண்மைக் கதை
கதை 1 :
சரவணன் BE முடித்திருக்கிறான்.
தென்மாவட்டத்தில் பிறந்து ,கஷ்டப்பட்டு படித்து சென்னையின் மேன்ஷனில் தற்போது வசித்து வருகிறான்.
சில மாதம் முன்புதான் தன் நீண்ட நாள் கனவான ,இருசக்கர வாகனொமொன்றை (பல்சர் 220)ஆசை ஆசையாக வாங்கினான்.
இன்று இண்டெர்வீவ் அட்ண்டெண்ட் செய்வதற்காக தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.கம்பெனி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்ற சந்தோசத்துடன் வெளியே வந்து பார்த்த போது,சரவணனின் வாகனம் சுக்குநூறாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
வாகனத்தை விட மிக மோசமாக நொறுங்கிப்போகிறான் சரவணன்.
கதை 2
ரோட்டோரமாக பெட்டிக்கடை நடத்தும் பெருமாள் ஒரு சிறு வியாபாரி .பிளாட்பாரத்தில் கடை நடத்தி பிழைத்து வந்த
பெருமாளுக்கு ,ஒரே பிரச்சினை, மழை பெய்தால் கடை நடத்தமுடியாது.இதற்காகவே நீண்டநாள் திட்டமிட்டு அக்கம்பக்கம் கடன் வாங்கி,
நாலு பிளைவுட் கட்டைகளை ,கார்பெண்டர்களை வைத்து அடித்து,சிறிய பெட்டியாக்கி
அதில் மிட்டாய்களை வைத்து , அவனுட்குட்பட்ட வர்க்கத்தில் கொஞ்சம் பெருமையாக கடை நடத்தி வந்தார்.
அன்றும் வழக்கம்போல்,குளித்து முடித்து,தன் அன்றைய வாழ்ந்திருத்தலுக்காக பெட்டிக்கடையை திறக்க வந்தார்.
பெட்டிக்கடை இருந்த சுவடில்லாமல் போயிருந்தது.வாழ்தலை பற்றிய பயத்துடன் பெருமாள் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்.
கதை 3
மைக்கேலுக்கு எப்போதும் வீடு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆறு மாததிற்கு ஒருமுறை வாடகை கட்டுபடியாகமல் ,குடும்பத்துடன் வேறு வீடு தேடி அலைவது வாடிக்கையான கஷ்ட அனுபவத்தை தந்திருக்கிறது.
தனக்காக இல்லாவிட்டாலும்,தன் பிள்ளைகளுக்காக ,நிரந்தர?இருப்பை
தேடித்தர எண்ணி,ஏதாவது ஒரு இடத்தில்
குடிசையை போட்டு விட முடிவெடுத்து,
ஆறு மாதத்திற்கு முன் ,
ரோட்டோர ,தின வட்டி வசூல்காரனிடம்
வட்டிக்கு காசு வாங்கி,குடிசை அமைத்து, பிள்ளைகளுக்காக தற்காலிக பாதுகாப்பை உறுதிப்படுத்தி தந்திருந்தான்.அன்றைய தினம்
மீன்பாடு வேலைக்கு போய்விட்டு திரும்பி வந்து ,ஏரியாவில்.நுழைந்தபோது.தன் மொத்த உழைப்பான குடிசையும் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து மைக்கேல் மயங்கிக்கொண்டிருந்தான்.
கதை 4
இடம் :மெரினா கடற்கரை.
இரண்டு போலிஸ்காரனின் உரையாடல்.
யோவ் மேலிடத்துல இருந்து தகவல் வந்திருக்கு,இன்னிக்கு செம வேட்டை காத்திருக்கு .
என்ன சொல்றீங்க ஏட்டையா?
போராட்டப் பசங்களை தடியடி நடத்தி கலைக்க சொல்லி ஆர்டர் வந்திருச்சு .
பசங்கள பார்த்தா பாவமா இருக்கு ஏட்டையா ?பேசி அனுப்பி வைக்கலாம்ல
அப்படி செஞ்சா..மிஞ்சுவானுங்கையா..
அப்படியே பேச்சுவார்த்தை நடத்தி இன்னிக்கு கலைஞ்சு போய்ட்டாலும்,நாளைக்கு வேறொரு பெரிய பிரச்சினைக்கு ,இன்னும் வீரியமா வருவானுங்க .
சரி நமக்கெதுக்கு வம்பு,
நீ போய் ,அந்தா பைக்கா தெரிது பாரு ,அதுல லத்திய வச்சு உடைக்க ஆரம்பி,
நான் குப்பத்து பக்கமா போய் தீ வச்சு ,
கடைங்களை நொறுக்கி
மேலிடம் சொன்ன கடமையை ஆத்துறேன்.
நீ பயப்படாத ,
இடைல எதிர்த்து கேக்குற எல்லாத்தையும் நமம் போலிஸ் செட்டு பார்த்துக்கும்.

Sunday, January 15, 2017

2000 ரூபாய் !!!

காட்சி 1
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா "கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
ஏன் அப்படித் தோன்றியதென தெரியவில்லை.
எனக்கு பின்னால் நிற்கும் ஒருவர்,என்னைத் தொட்டு ..
தம்பி ..இன்னிக்கு எவ்ளோ தராங்களாம்..
2000ரூபாயா 5000ரூபாயா ?
என ஆதங்கத்தோடு கேட்டார் ?
எனக்கு சரியாக தெரியவில்லையென
அவரிடம் சொன்னாலும்,
இதற்கு முன்பே அவர் இந்த கேள்வியை கேட்டது போலவும்,
நானும் இத்தகைய பதிலை முன்பே கூறியது போலவும் நினைவில் வந்து போனது.
எனக்கு முன்பு நிற்கும் ,வயதான பெரியவர் ,வங்கி செக்கியுரிட்டியிடம் ,என்னால ரொம்ப நேரம் நிக்க முடியல ,என்னை மட்டும் சீக்கிரம் உள்ளே அனுமதிக்க முடியுமாவென கெஞ்சிக்கொண்டிருந்தார்.
எதற்கும் மசிந்து கொடுக்காத செக்கியூரிட்டி,அப்பெரியவரை வரிசைக்கே திரும்ப அனுப்பி வைத்தார்.
ஐந்தைந்து நபராக வங்கியின் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர்.
வங்கியிலிருந்து வெளியே வரும் ஒவ்வொருடைய கையிலும் 2000ரூபாய் நோட்டு ஒன்றை திணிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டதை போல உணர்ந்தேன்.
சில மணி நேரம் கழித்து,
வங்கியினுள் தள்ளப்பட்டேன்.
பெரியவர் ஒருவர் ,
தம்பி ,இந்த ஃபார்மை நிரப்பிக் கொடுங்களேன் என கெஞ்சும் தொனியில் என்னிடம் கேட்டார்.அவரையும் முன்பே பார்த்தது போலிருந்தது.
அவருடைய பெயர் அழகர்சாமி என்பதை
படிவம் நிரப்பித்தருகையில் தெரிந்துகொண்டேன்.
சுமார் சிடுமூஞ்சி வங்கி ஊழியர்கள்,இப்போது சுமார் சுமார் சிடுமூஞ்சி ஊழியர்களாக பரிணாமம் பெற்றிருந்ததை உணர முடிந்தது.
பெரியவர் அழகர்சாமி ,அவ்வூழியர் ஒருவரிடம்,தனக்கு 2000ரூபாய் தாள் வேண்டாம் எனவும் ,100ரூபாயாக தருமாறு கேட்டார்.
வங்கி ஊழியரோ,அசால்டாக மோடி இப்பதான் அடிச்சிட்டு இருக்காப்ல,வரும்போது தரேன்,இப்ப இத வச்சிக்கோவென கையில் திணித்து அனுப்பிவிட்டார்.
யாரோ ஒரு பெண் ..
தன்னுடைய பெயர்தான் ஸ்வேதா என வங்கி மேனேஜரிடம் மன்றாடிக்கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்க முடிந்த வேளையில்..
என் முறையும் வந்தது..
எனக்கும் 2000ரூபாய் பேப்பரைத்தான் தருவார்கள் என்று தெரிந்ததால்,
அவர்கள் திணிப்பை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கித் தொலைத்து,வாயிலில் தள்ளப்பட்டேன்.
காட்சி 2
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா "கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
எனக்கு பின்னால் நின்றுகொண்டிருக்கும் கனேசன் என்கிற நபர்,
தம்பி ..இன்னிக்கு எவ்ளோ தராங்களாம்..
2000ரூபாயா 5000ரூபாயா ?
என ஆதங்கத்தோடு கேட்டார் ?
முன்பு கேட்ட அதே கேள்வியென ...
என்னுள் திகைத்தாலும்,
எனக்கு சரியாக தெரியவில்லையென
கூறினேன்.
பெரியவர் அழகர்சாமி ,எனக்கு முன்னால் நிற்கமுடியாமல் வியர்வை வழிய நின்றுகொண்டிருந்தார்.
பேக்கில் இருந்த வாட்டர்பாட்டிலை பெரியவரிடம் கொடுத்தேன்,
தாகத்தை தணித்துக்கொண்டு ,கஷ்டத்தை எதிர்கொள்ள தொடங்கினார்.
சில மணி நேரம் கழித்து,வங்கியில் அனுமதிக்கப்பட்டேன்,
பெரியவர் அழகர்சாமி படிவம் நிரப்பித் தர கேட்டார்,அவரிடம் அழகர்சாமிதானங்கையா என கேட்டு எழுத தொடங்கினேன், எப்படி தெரியுமென கேட்டார்,
காதில் கேட்காதது போல பாவனை செய்து நிரப்பித் தந்தேன்,
ஸ்வேதா என்கிற பெண்மனி ,கடுப்பை முகத்தில் வைத்துகொண்டு
ஆவேசமாக வங்கியை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.
சுமார் சுமார் சிடுமூஞ்சி ஊழியர்கள்,இப்போதும் மோடி சில்ல்றை நோட்டை அச்சடிச்சுட்டு இருக்கார்,அதுவரை இதை வாங்கிக்கோவென திணித்துக்கொண்டிருந்தனர்,
அழகர்சாமி பெரியவருக்கும்,
எனக்கும்,எனக்கு பின்னால் நின்ற கணேசனுக்கும் ,பிங்க் கலர் பேப்பர் திணிக்கபட்டு வாயிலில் கடாசப்பட்டோம்..
காட்சி 3
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
எனக்கு பின்னால் நிற்கும் கணேசன்,
என்னிடம் பேச எத்தனித்தார்,
அவரிடம் திரும்பி,
இன்னிக்கும் 2000ரூபா தான்னே தராங்க என கூறி, அவரை சலிப்பு மோடிலிருந்து ஷாக் மோடுக்கு பார்வேர்ட் செய்தேன்.
முன்னால் நிற்கும் அழகர்சாமி பெரியவருக்கு,தண்ணீர் கொடுத்து,
தன்னம்பிக்கை தளராமல் நிற்கவைத்தேன்.
பேங்க் செக்கியூரிட்டி முறைத்தவாரே வரிசையில் நிற்போரை,ஐந்தைந்து பேராக கணினித்தனமாக அனுப்பிக்கொண்டிருந்தார்.
சில மணி நேரம் கழித்து,
வங்கியினுள் இழுக்கபட்டதும்,
பெரியவர் அழகர்சாமி படிவத்தை நிரப்ப நீட்டினார்,இந்த முறை பெயரெதும் கேக்காமல்,எழுதிமுடித்து அவரிடம் அளித்தேன்.
எழுதிக்கொடுத்தது சரிதானா என சந்தேகத்துடன் ,படிவத்தை பலவாறு திருப்பி திருப்பி பெரியவர் பார்த்துக்கொண்டார்,
ஸ்வேதா என்கிற பெண்..
நான் கம்பளைண்ட் பண்னாம விடமாட்டேனென ,மேனேஜரிடம் கோபமாக கத்திவிட்டு
கடந்துகொண்டிருந்தார் .
சுமார் சுமார் வங்கி ஊழியர்கள் ,சில்லறை கேட்டவர்களிடமெல்லாம்
மோடி அச்சடிச்சுட்டு இருக்காப்ல என
வழமைபோல் துப்பிக்கொண்டே ,2000ரூபாயை திணித்து,எங்களை
அவுட் ஆப் ஸ்டேடியத்திற்கு (வங்கி வாசலுக்கு)தூக்கியடித்தார்கள்
காட்சி 50
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா "கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
பின்னால் நிற்பது கணேசன்,
முன்னால் நிற்பது பெரியவர் அழகர்சாமி இப்படி
ஒரே நிகழ்வில் சிக்கித்தவித்துக் கொண்டிருப்பதை யாரிடம் சொல்வதென தெரியவில்லை,
கணேசனிடம் சொன்னால்,
உடம்பு ஏதும் சரியில்லையாப்பா வென கரிசனத்துடன் பல்பு கொடுக்கப்படுமென தெரிந்ததால்,
இதுவரை அம்முயற்சியை எடுக்கத் துணியவில்லை.
கியுவின் வரிசையில் உள்ள மனித தலைகளில்,தெரிந்த முகத்தை தேடிக்கொண்டிருந்தேன்,தூரத்தில்
டாக்டர் மணிகண்டன் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன்.
அவரிடம் எனக்குள் நிகழும் இப்பிரச்சினையை சொல்லவேண்டும் போல இருந்தது.
திடிரென எப்படிப் பேசுவதென தயக்கமிருந்து கொண்டே இருந்தாலும்,
இந்த வாழ்க்கை இச்சுழற்சியிலயே நின்றுவிடுமோ என பயம் கவ்வி,
அவரை பார்த்து பிரச்சினையை பிரித்தெடுக்க எண்ணி,
டாக்டரை நோக்கி கையசைத்தேன்.
அவரும் என்னை அடையாளம்.கண்டு கையசைத்த நொடியில்,
2000ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைத்த மகிழ்ச்சியை எனக்குள் அடைந்தேன்.
கியுவிலிருந்து வெளியே வாங்க,நான் இடம் தரேன் என சைகை செய்ததை ,
சரியாக புரிந்துகொண்ட டாக்டர் மணிகண்டன் ,தானொரு சிறந்த சைக்காலஜிஸ்ட் என எனக்குள் நிரூபித்துக்கொண்டிருந்தார்
என்ன தம்பி,எவ்ளோ நேரம் நிக்குறீங்க?
என கேட்டார் ,
50நாளா நிக்குறேன் டாக்டரென சொல்லி உடனடி அதிர்ச்சி கொடுத்தால்,
மதுரையை விட்டே டாக்டர் ஒடிவிடும் அபாயமிருப்பதால்,இப்பதான் டாக்டரென அருண் ஜெட்லியே நம்பமுடியாத பொய்யொன்றை உதிர்த்து,
பின்னால் நிற்கும் கணேசனிடம்
சமாதனம் பேசி ,டாக்டரை கியுவில் இணைத்துக்கொண்டேன்.
என்னிக்கு இந்த பிரச்சினை தீரப்போகுதோனு தெரியலையே என டாக்டர் அலுத்துக்கொண்டதும்,
அவருக்கும் என் போன்ற பிரச்சினை இருக்குமோவென நினைத்தாலும்,
அவர் ஃப்ரெஷ்சாக நின்றுகொண்டிருப்பதால் ,இந்த பாதிப்பை அனுபவித்திருக்க மாட்டாரென ஆசுவாசமடைந்தேன்.
டாக்டர் ...உங்க அப்பாய்ண்ட்மெண்ட் வேனும் டாக்டரென பேச்சு கொடுத்தேன்,
யா...கண்டிப்பா,
சாயங்காலம் 6மணிக்கு வந்திடுங்க தம்பியென உற்சாகமாக பதில் சொன்னவரை,இடைமறித்து,
இல்லை டாக்டர் ,எனக்கு இப்பவே அப்பாய்ண்ட்மெண்ட் வேனும் சாரென,
ரிசர்வ் பேங்க்த்தனமாக குழப்பியடித்தேன்.
இப்பவா ...இப்ப எப்படி தம்பி?
ஆமா டாக்டர்,இப்பவேதான் .
க்ளினிக் வாங்க தம்பி .கன்சல்ட் பண்ணலாம்
இல்லை டாக்டர் .
இந்த இடத்தை விட்டு என்னால வரமுடியல..
திரும்ப திரும்ப இங்கேயேதான் நிக்க முடியுது டாக்டர் ..
ஓ...
சரி சொல்லுங்க தம்பியென
டாக்டர் கேட்க முன்வந்ததும்,
குழப்பத்துடன் பேச ஆரம்பித்தேன்.
டாக்டர் ..
ஒரு 50நாளாவே ஒரே விசயம் மட்டுமே,எனக்குள்ள நடக்குது டாக்டர் .
அப்படியா.. என்ன விசயம் ?
ஏதோ பிரம்மையா இருக்கு டாக்டர்,
டெய்லி இதே க்யுவுலயே நிக்குறேன் டாக்டர் ,
இதே வங்கி .
இதே நபர்கள தினமும் பாக்குறேன் டாக்டர் ..
ஓ..வென ஆச்சர்யத்துடன் கேட்ட டாக்டர்,
சரி தம்பி...
உங்ககிட்ட சில கேள்விகள் கேக்குறேன்..
பதில் சொல்லுங்க.
உங்களுக்கு தினமும் ..
ஒரு பிங்க் நிற 2000ரூபா தாளை திணிச்சு வெளியே அனுப்பி விடுறாங்களா ?என டாக்டர் திருப்பி கேட்டார்
ஆமா டாக்டர் ..
அதேதான் தினமும் நடக்குது
சரியென நிதானமான டாக்டர்,
அந்தா தெரியுதே அந்த பொண்ணு,
பேரு ஸ்வேதா தான ?
கரெக்ட் டாக்டர் ..
அந்த பொண்ணையும் டெய்லி பாக்குறேன்,
எப்படி டாக்டர் உங்களுக்குத் தெரியும்
மூதேவி..இது பிரம்மையில்ல
டெய்லி இதுதாண்டா நிஜமாவே நடக்குது.
நானும் 50நாளா கியுவுல நிக்குறேன்டா.
காலையில வந்தா ...சாயந்திரம் ஆகிடுது.
கியுவுல நின்னு பாதிக்கப்பட்டு
எந்த நினைவும் வராம
மறுபடியும் இதே கியுவுல நிக்குறதுதான்
உன்னோட பிரச்சினை,
நாடு முழுக்க எல்லாருக்கும் இந்த ஒரு சம்பவம் தான்டா 50நாளா நடந்துட்டு இருக்குது.
பத்து நாளைக்கு முன்னாடி கூட..
இதே சந்தேகத்தை என்கிட்ட கேட்டது கூட மறந்து போச்சாடா உனக்கு.
டாக்டர் சொல்ல சொல்ல ..
நம்பமுடியாமல் திகைத்தவாரே
வங்கியினுள் தள்ளப்பட்டேன்
சிறிது நேரத்தில்..2000ரூபாய் தாள் ஒன்றை திணிக்கபட்டு ,வாசலுக்கு வெளியே துப்பப்பட்டேன்.
காட்சி 51
தல்லாகுளம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.

பிரபலமான பதிவுகள்